2024-ல் கடல்வழியாக ஸ்பெயின் வரமுயன்ற 10,000-க்கும் மேற்பட்ட அகதிகள் பலி!

2024 ஆம் ஆண்டில் மட்டும் கடல் வழியாக ஸ்பெயின் நாட்டை நோக்கிப் புலம்பெயர்ந்துவர முயன்ற 10,000-க்கும் மேற்பட்டோர் பலியானதைப் பற்றி..
கோப்புப் படம்
கோப்புப் படம்ஏபி
Published on
Updated on
1 min read

2024-ல் மட்டும் ஸ்பெயின் நாட்டிற்கு கடல்வழியாக புலம்பெயர்ந்து வரமுயன்ற 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஸ்பெயின் இடப்பெயர்வு உரிமைகள் குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் தொடர் வன்முறைகள் மற்றும் மோதல்களிலிருந்து தப்பிப் பிழைத்து வாழ்க்கையைத் தேடி ஐரோப்பாவிலுள்ள ஸ்பெயின் நாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் தினந்தோறும் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்தாண்டில் (2024) மட்டும் வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மூரித்தானியாவின் துறைமுகங்களிலிருந்து படகுகள் மூலம் ஸ்பெயின் நாட்டின் கட்டுப்பாட்டிலுள்ள கேனரி தீவுகளுக்கு பல்லாயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.

இதில் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத நாட்டுப் படகுகளின் மூலம் பயணிப்பதனால் கடலில் நடுவழியில் விபத்துக்குள்ளாகி கடல் நீரில் மூழ்கி ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் உயிரிழந்து விடுகின்றனர்.

இதுகுறித்து நேற்று (டிச.26) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தனியார் அமைப்பான கேமினாண்டோ ஃப்ரோண்டெராஸ் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: மொராக்கோ கடலில் அகதிகள் படகு மூழ்கியது! 69 பேர் பலி!

இந்த அறிக்கையில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து டிச.15 வரையிலான காலகட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சென்றடையும் நோக்கில் மிகவும் ஆபத்தான அட்லாண்டிக் கடல்வழியாக புலம்பெயர்ந்த ஆப்பிரிக்கர்களில் சுமார் 10,457 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 1,538 குழந்தைகளும், 421 பெண்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் யாவும் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் அந்த விபத்துகளில் மீட்கப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் நாளொன்றுக்கு 30 பேர் ஸ்பெயினை நோக்கிய பயணத்தில் பலியாகின்றார்கள். இது கடந்த ஆண்டைவிட 58 சதவிகிதம் அதிகம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த டிச. 15 ஆம் தேதி வரை 57,700 பேர் ஸ்பெயின் நாட்டிற்குப் புலம்பெயர்ந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 12 சதவிகிதம் அதிகம் எனவும் ஸ்பெயின் நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதில் பெரும்பாலானோர் அட்லாண்டிக் கடல் வழியாக பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com