
தூத்துக்குடியில் நடைபெறவுள்ள குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள் அடிக்கல் விழாவில் ஒரே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்கின்றனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 28-ம் தேதி பகல் 11 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது.
விழாவில் பங்கேற்பதற்காக கோவை சூலூரில் இருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். பின்னர், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி, வஉசி துறைமுக விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
ராக்கெட் ஏவுதளம் தொடர்பாக ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து பேசியிருந்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். குலசேகரன்பட்டினம் பகுதியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இங்கு சுமார் 2,300 ஏக்கர் நிலம் தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் உடன் இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்க இருக்கிறார். அரசியல் ரீதியாக திமுக - பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. தேர்தல் வரவுள்ளதை அடுத்து இம்மோதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் முதல்வர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் ஒன்றாக ஒரு விழாவில் பங்கேற்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.