
ராமேஸ்வரம் மீனவர்கள் இன்றுமுதல்(ஜூலை 2) காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்கு துறைமுகம், தொண்டியை அடுத்த நம்புதாளை பகுதிகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை 300 நாட்டுப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் 4 படகுகளுடன் 25 மீனவா்களைக் கைது செய்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், அவா்களை யாழ்ப்பாணம் மீன் வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து, மீனவா்கள் 25 பேரும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, ஜூலை 15-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இவா்களில் ஒருவா் 18 வயதுக்கு குறைவானவா் என்பதால், அவா் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டாா். 24 மீனவா்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 200-க்கும் மேற்பட்ட மீனவா்கள், பொதுமக்கள் பாம்பன் வடக்கு துறைமுகத்தில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று(ஜூலை 2) முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வரும் ஜூலை 5 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.