
குவாஹாட்டி: அஸ்ஸாமில் நீடிக்கும் கடும் வெள்ளத்தால் 6.71 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
அஸ்ஸாமில் பலத்த மழையை தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் 28 மாவட்டங்களில் உள்ள 11.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், செவ்வாய்க்கிழமை மாநிலத்தில் வெள்ள பாதிப்பு மிகவும் மோசமாக மாறியுள்ளது. குறிப்பாக திப்ருகா் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, தொடா்ந்து 7-ஆவது நாளாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வெள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி டின்சுகியா மாவட்டத்தில் இரண்டு பேரும், தேமாஜி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
கம்ரூப், தமுல்பூர், சிராங், மோரிகான், லக்கிம்பூர், பிஸ்வநாத், திப்ருகார், கரீம்கஞ்ச், உடல்குரி, நாகோன், போங்கைகான், சோனித்பூர், கோலாகாட், ஹோஜாய், தர்ராங், சாரெய்டியோ, நல்பாரி, ஜோர்ஹாட், சிவசாகர், கர்பி மா கோலி அங், சிவசாகர், கர்பி மாஜி அங் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
லக்கிம்பூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 1,65,319 பேரும், தர்ராங் மாவட்டத்தில் 1,47,143 பேரும், கோலாகாட் மாவட்டத்தில் 1,06,480 பேரும், தேமாஜி மாவட்டத்தில் 1,01,888 பேரும், டின்சுகியாவில் 74,848 பேரும், பிஸ்வநாத்தில் 73,074 பேரும், காச்சார்நிட் மஜூவில் 1,69,567 பேரும், மோரிகான் மாவட்டத்தில் 48,452 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்திற்கு 42476.18 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இரண்டாவது அலை வெள்ளத்தில் 84 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 2208 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள பல்வேறு பகுதிகளில் பிரம்மபுத்திரா நதி உள்பட 13 முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் நேமாதி காட், தேஜ்பூர், குவஹாத்தி மற்றும் துப்ரி ஆகிய இடங்களில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் 489 நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களை அமைக்கப்பட்டுள்ளது, அங்கு கிட்டத்தட்ட 2.87 லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனா். திப்ருகா், ஜோா்ஹாட், கோலாகாட், லக்கீம்பூா், பாா்பேட்டா உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலர் பாதுகாப்பான இடங்கள், மேட்டு பகுதிகள், பள்ளிக் கட்டடங்கள், சாலைகள், பாலங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
வெள்ள பாதித்த பகுதிகளில் மாவட்ட நிா்வாகத்துக்கு மாநில பேரிடா் மீட்புப் படை, தீயணைப்புத் துறை, காவல் துறை மற்றும் தன்னாா்வலா்கள் உதவிபுரிந்து வருகின்றன.
செவ்வாய்கிழமை வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2,900 பேரை மீட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செவ்வாய்க்கிழமை 10754.98 குவிண்டால் அரிசி, 1958.89 குவிண்டால் பருப்பு, 554.91 குவிண்டால் உப்பு, 23061.44 லிட்டர் கடுகு எண்ணெய் மற்றும் கால்நடைத் தீவனம் ஆகியவற்றை நிர்வாகம் வழங்கியது.
செவ்வாய்கிழமை ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு 74 சாலைகள், 6 பாலங்கள் மற்றும் 14 மின்கம்பங்கள் மற்றும் 5 கரைகளை உடைந்து சேதமடைந்துள்ளது.
வெள்ளத்தால் இதுவரை 8,32,099 விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அஸ்ஸாம் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.