
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இயக்குநர் வெற்றிமாறன் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை புளியந்தோப்பு ரௌடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் தனது வீட்டின் கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை இரவு பார்வையிடச் சென்றபோது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து செம்பியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கொலையாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய, சென்னை பெருநகர காவல் துறையின் கூடுதல் காவல் ஆணையர் அஸ்ரா கர்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவ இடத்தில் இருந்து 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), ஜெ.சந்தோஷ் (22), பெரம்பூர் பொன்னுசாமிநகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த சே.திருமலை (45), திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை க.மணிவண்ணன் (26), குன்றத்தூரைச் சேர்ந்த க.திருவேங்கடம் (33), திருநின்றவூரைச் சேர்ந்த த.வினோத் (38), கோ.அருள் (33),த.செல்வராஜ் (48) ஆகிய 8 பேர் அண்ணாநகர் காவல் துணை ஆணையர் முன் சனிக்கிழமை அதிகாலை சரணடைந்தனர்.
ராணிப்பேட்டையைச் சேர்ந்த கோகுல் (25), விஜய் (19), திருவள்ளூரைச் சேர்ந்த சிவசக்தி (26), ஆகியோர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு சரணடைந்தனர்.
அவர்களை போலீஸார் கைது செய்தனர். 11 பேரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளித் திடலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலலுக்கு இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் தீனா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.