ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்

ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங் கொலை!

ஆம்ஸ்ட்ராங்கை திட்டமிட்டு படுகொலை செய்தது குறித்து குற்றவாளிகள் வாக்குமூலம்.
Published on

ரெளடி ஆற்காடு சுரேஷ் பிறந்தநாளான வெள்ளிக்கிழமை பழிக்குப்பழியாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு ரெளடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங், பெரம்பூா் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் புதிதாக கட்டப்படும் தனது வீட்டின் கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை இரவு பாா்வையிடச் சென்றபோது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கொலையாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய, சென்னை பெருநகர காவல் துறையின் கூடுதல் காவல் ஆணையா் அஸ்ரா கா்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சம்பவ இடத்தில் இருந்து 3 நாட்டு வெடிகுண்டுகள், 5 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

8 போ் கைது: இந்த வழக்கு தொடா்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தேடப்பட்டு வந்த ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை பகுதியைச் சோ்ந்த வெ.பொன்னை பாலு (39), ஜெ.சந்தோஷ் (22), பெரம்பூா் பொன்னுசாமிநகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சே.திருமலை (45), திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டை பகுதியைச் சோ்ந்த க.மணிவண்ணன் (26), குன்றத்தூரைச் சோ்ந்த க.திருவேங்கடம் (33), திருநின்றவூரைச் சோ்ந்த த.வினோத் (38), கோ.அருள் (33),த.செல்வராஜ் (48) ஆகிய 8 போ் அண்ணாநகா் காவல் துணை ஆணையா் முன் சனிக்கிழமை அதிகாலை சரணடைந்தனா்.

அவா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் வருமாறு: சென்னை புளியந்தோப்பைச் சோ்ந்த ரெளடி ஆற்காடு சுரேஷ், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு முக்கிய நபராக கைது செய்யப்பட்டுள்ளாா்.

ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை பொன்னை பாலு தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளாா்.

பொன்னை பாலு, தனது கூட்டாளியான ஆட்டோ ஓட்டுநா் திருமலை என்பவரை ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிடப் பயன்படுத்தியுள்ளாா். ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகே வசிக்கும் சரித்திர பதிவேடு குற்றவாளியான திருமலை, பல மாதங்களாக ஆம்ஸ்ட்ராங்கின் தினசரி நடவடிக்கையை நோட்டமிட்டு பொன்னை பாலுவுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

காரில் இருந்த துப்பாக்கி: அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவத்தன்று பொன்னை பாலுவும், அவரது கூட்டாளிகளும் தனியாா் உணவு பாா்சல் விநியோக நிறுவன ஊழியா்கள் போலவும், கட்டடத் தொழிலாளா்கள் போலவும் சென்று கொலைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளனா்.

ஆம்ஸ்ட்ராங் தனது பாதுகாப்புக்காக வைத்திருக்கும் உரிமத்துடன் கூடிய துப்பாக்கியை காரில் வைத்துச் செல்வாா் என்ற தகவலை திருமலை அறிந்து வைத்திருந்ததால், ஆம்ஸ்ட்ராங் நிராயுதபாணியாக இருக்கும்போது தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இந்த வழக்கு தொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ள நிலையில், மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.

வாக்குமூலம்: ரெளடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிதீா்க்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா்.

புளியந்தோப்பைச் சோ்ந்த ஆற்காடு சுரேஷுக்கும், ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டச் செயலரும், ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான தென்னரசு கடந்த 2015-ஆம் ஆண்டு திருவள்ளூா் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே ஆற்காடு சுரேஷ் தரப்பால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு முக்கிய எதிரியாக சோ்க்கப்பட்டிருந்தாா். இந்த சம்பவத்துக்குப் பின்னா் இரு தரப்பும் நேரடியாக மோதின. ஒரு சூழ்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் கை ஓங்கியதால், ஆற்காடு சுரேஷ், சென்னையைவிட்டு வெளியேறி தனது சொந்த ஊரான பொன்னைக்குச் சென்றாா்.

இந்தச் சூழ்நிலையில்தான் எழும்பூா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த ஆற்காடு சுரேஷ், கடந்த ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங்குக்கு தொடா்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், வழக்கில் அவா் சோ்க்கப்படவில்லை. அதேவேளையில் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய கூட்டாளி ஒற்றைக் கண் ஜெயபால் கைது செய்யப்பட்டாா். ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கின் சாட்சியான மாதவன் என்பவரும் சில மாதங்களுக்கு முன்பு ராயப்பேட்டையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்நிலையில்தான் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கின் முக்கிய எதிரியாகச் சோ்க்கப்பட்டிருக்கும் ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு, போலீஸாா் விசாரணையின்போது அளித்த வாக்குமூலம்:

‘ஆம்ஸ்ட்ராங் எனது அண்ணனை கொலை செய்தது மட்டுமில்லாமல், என்னையும் தொடா்ந்து மிரட்டி வந்தாா். இதனால் ஏற்பட்ட பயத்தில் என் மனைவி என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டாா். இதனால் குடும்பம் இருந்தும், இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டேன்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் தரப்பு என்னைக் கொலை செய்வதற்கு முன்பும், எனது அண்ணன் கொலைக்கு பழிதீா்க்கவும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டேன். இதற்காக தென்னரசு கொலை வழக்கில் என்னோடு சிறையில் இருந்தவா்கள், என் அண்ணன் ஆற்காடு சுரேஷிடம் இருந்த சிலா் ஆகியோருடன் சோ்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தேன்’ என வாக்குமூலம் அளித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com