
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களில் சுமார் 1200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 200 தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தனியார் நிறுவனம், இவர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்காமல் மிகக் குறைவான ஊதியத்தை மட்டுமே வழங்கி வருகிறதாம். மேலும் ஊழியர்களின் பெயரில் பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ, பிஎஃப் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
மேலும், தூய்மைப் பணிக்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஊழியர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்துகின்றனராம். இதையடுத்து, தூய்மை பாரத வாகன ஓட்டுநர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேயர் ஜெகன் பெரியசாமி, தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தூய்மைப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வெளியூரில் இருந்து தூய்மைப் பணிக்கு ஆள்கள் எடுக்காமல் இருக்க தனியார் நிறுவத்திற்கு அறிவுறுத்துவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். எனினும் திங்கள்கிழமை மாநகர் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால், தூய்மைப் பணி வெகுவாக பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.