
உன்னாவ்: லக்னெள-ஆக்ரா அதிவிரைவுச் சாலையில் புதன்கிழமை அதிகாலை பால் லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதியதில் 18 பேர் பலியான சோக சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூர்ன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னெள-ஆக்ரா அதிவிரைவு சாலையில் புதன்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் பால் லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 19-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உன்னாவ் சிஎச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பேருந்து அதிக வேகத்தில் சென்றதால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
உன்னாவ் அருகே உள்ள அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் பிகாரில் இருந்து வந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதே எங்களது முதல் கடைமை என தெரிவித்த அதிகாரிகள், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், பாங்கர்மாவ் வட்ட அதிகாரி அரவிந்த் சௌராசியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு தகவல் தெரிவித்து மீட்புப் பணிகளில் விரைந்து ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எக்ஸ் வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூர்ன கார்கே, இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உயிர்காக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.