
புது தில்லி: பிகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது.
மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச், ரனாகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்டில் பத்ரிநாத் மற்றும் மங்களூர்; பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு; ஹிமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர்; பிகாரில் ரூபாலி; தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அமர்வாரா தொகுதிகளுக்கான இடைத்தேர்கலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதல் வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
ஹிமாச்சல பிரதேசம்
ஹிமாச்சல பிரதேசத்தில் மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்ததை அடுத்து அவர்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜிநாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதையடுத்து, ஹமிர்பூர், நலகர் மற்றும் டேரா ஆகிய பேரவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தொகுதியில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மூன்று தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.
காங்க்ரா மாவட்டத்தின் டேரா பகுதியில், காங்கிரஸ் சார்பில் கமலேஷ் (53), பாஜக வேட்பாளர் ஹோஷ்யார் சிங் (57), மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சுலேகா தேவி (59), அருண் அங்கேஷ் சைல் (34) மற்றும் வழக்குரைஞர் சஞ்சய் சர்மா (56) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஹமிர்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஆஷிஷ் சர்மா (37),காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் புஷ்பிந்தர் வர்மா (48), சுயேச்சை வேட்பாளர்கள் பிரதீப் குமார் (58), நந்த் லால் சர்மா (64) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
நலகர் தொகுதியில் காங்கிரஸ் வேடபாளர் ஹர்தீப் சிங் பாவா (44), பாஜக வேட்பாளர் கேஎல் தாக்கூர் (64), ஸ்வாபிமான் கட்சி வேட்பாளற் கிஷோரி லால் சர்மா (46), சுயேச்சை வேட்பாளர்கள் குர்னாம் சிங் (48), ஹர்பிரீத் சிங் (36), விஜய் சிங் (36) ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மேற்கு வங்கம்
மணிக்தாலா தொகுதுயில் டிஎம்சி வேட்பாளர் சுப்தி பாண்டேவை எதிர்த்து பாஜக சார்பில் கல்யாண் சௌபே களத்தில் உள்ளார். ரனாகாட் தக்ஷினில் பாஜக வேட்பாளருக்கு போட்டியாக முகுத் மணி அதிகாரி போட்டியிடுகிறார். பாக்தாவில் பாஜக வேட்பாளருக்கு எதிராக டிஎம்சி சார்பில் மதுபர்ணா தாக்கூர், ராய்கஞ்சில் டிஎம்சி வேட்பாளரை எதிர்த்து பாஜக கிருஷ்ண கல்யாணி களத்தில் உள்ளார்.
பஞ்சாப்
ஜலந்தர் மேற்கு தொகுதி இடைத்தேர்தலுலி ஆம் ஆத்மி சார்பில் மொஹிந்தர் பகத், காங்கிரஸ் வேட்பாளராக சுரிந்தர் கவுர் களத்தில் உள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்பி சுஷில் குமார் ரிங்குவுடன் எம்எல்ஏ ஷீத்தல் அங்கூரல் பாஜகவில் இணைந்ததை அடுத்து மார்ச் 28 ஆம் தேதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக ஷீத்தல் அங்கூரல் களத்தில் உள்ளார்.
தமிழ்நாடு
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதியில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஜூன் 10-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இடைத்தேர்தலில் திமுக சார்பில் கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலர் அன்னியூர் அ.சிவா, பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் பொ.அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சைகள் என மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.