
லோகோ பைலட்களின் பணி நேரம் கூர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது:
லோகோ பைலட்கள்(ரயில் ஓட்டுநர்) ரயில்வே குடும்பத்தின் முக்கியமான உறுப்பினர்கள். எங்கள் லோகோ பைலட்களை பலவீனப்படுத்தும் விதமாக எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களையும், நாடகங்களையும் பரப்பி வருவதால், சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
லோகோ பைலட்களின் பணி நேரம் கூர்ந்து கண்காணிக்கப்படுகிறது. பயணங்களுக்குப் பிறகு ஓய்வு வழங்கப்படுகிறது. சராசரி பணி நேரம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பராமரிக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் சராசரி பணி நேரமானது 8 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது. அவசர காலங்களில் மட்டுமே பணி நேரம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாக உள்ளது.
2014-க்கு முன்பு லோகோ பைலட்களின் அறை மோசமான நிலைமையில் இருந்தது, ஆனால் 2014-க்கு பிறகு பணிபுரியவதற்கு ஏற்றவாறு இருக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 7000 ஓட்டுநர் அறைகள் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளன. ஏசி அறைகளுடன் புதிய ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்படுகின்றன.
லோகோ பைலட்கள் ஒரு பயணத்தை முடித்த பிறகு, தலைமை அலுவலகத்திற்கு வெளியே இருந்தால் ஓய்வெடுக்க ஓய்வு அறைக்கு வருகிறார்கள்.
2014-க்கு முன்பு ஓய்வு அறைகள் மோசமாக இருந்த நிலையில், தற்போதுள்ள 558 ஓய்வு அறைகள் குளிர்சாதன வசதியுடன் உள்ளன.
அதிகமான ஓய்வறைகளில், பாதத்திற்கு மசாஜ் செய்யப்படுகிறது. லோகோ பைலட்களின் பணிச்சூழலை புரிந்துகொள்ளாமல் காங்கிரஸ் விமர்சனம் செய்து செய்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஆள்சேர்ப்புப் பணிகள் முடிந்து 34,000 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 18,000 பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
போலியான செய்திகளால் ரயில்வே குடும்பத்தை அழிக்கும் முயற்சி தோல்வியடையும். நமது நாட்டிற்கு சேவை செய்ய ஒட்டுமொத்த ரயில்வே குடும்பமும் ஒன்றிணைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.