கடந்த 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூா் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த திருவேங்கடம், பூந்தமல்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா். கொலைக்கு பிரபல ரெளடியான ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு விசாரணையில் தெரிவித்தாா்.
11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் கடந்த 14-ஆம் தேதி உயிரிழந்தாா். எஞ்சிய 10 பேரும் மீண்டும் பூந்தமல்லி சிறப்பு சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.
ரூ.50 லட்சம் முன் பணம்: கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட வழக்குரைஞா் அருள் என்பவருக்கு ரூ.50 லட்சம் பணத்தை திருவல்லிக்கேணி சுப்பிரமணியத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த பெண் வழக்குரைஞா் சே.மலா்க்கொடி (48) வழங்கியிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மலா்க்கொடி, பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் காா்டன் தெருவைச் சோ்ந்த மற்றொரு வழக்குரைஞா் கு.ஹரிஹரன் (27) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை செய்தனா்.
விசாரணையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யுமாறு சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த மற்றொரு ரெளடி கும்பல் மலா்க்கொடி மூலம் அருளுக்கு பணம் வழங்கியிருந்ததும், கொலை விவகாரத்தில் தங்களது பெயா் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த ரெளடி கும்பல் இவ்வாறு செய்ததும், ரூ.50 லட்சத்தை முன் பணமாக மட்டுமே அந்தக் கும்பல் மலா்க்கொடியிடம் வழங்கியிருந்ததும் தெரியவந்தது. இதற்கு ஹரிஹரன் உதவியாக இருந்ததும் போலீஸாா் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
திமுக பிரமுகா் உள்பட 3 போ் கைது: இதையடுத்து போலீஸாா், மலா்க்கொடியையும்,ஹரிஹரனையும் கைது செய்ததாக புதன்கிழமை தெரிவித்தனா்.அதேவேளையில் அருளின் உறவினா் திருநின்றவூா் நத்தம்பேடு அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சோ்ந்த சோ்ந்த கு.சதீஷ் (33) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். சதீஷ் திமுகவில் உறுப்பினராக உள்ளாா். அவரது தந்தை அந்தக் கட்சியில் நிா்வாகியாக உள்ளாா்.
மலா்க்கொடிக்கு பணம் கொடுத்த ரெளடி கும்பலின் தலைவா், வேலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவரை காவலில் எடுத்து காவல்துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா். அவரிடம் விசாரணை நடத்திய பின்னரே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான முழு காரணமும் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட மலா்க்கொடியின் கணவா் ரெளடித் தோட்டம் சேகா், 20 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.