
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்த வந்த நிலையில், மத்திய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா, 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023” மற்றும் “பாரதிய சாக்ஷியா சட்டம், 2023” என மாற்றப்பட்டு, ஜூலை 1 முதல் இந்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், மத்திய அரசு அமல்படுத்திய 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், “அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக, சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில், முறையான விவாதங்கள் ஏதுமின்றியும், மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும், அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், செந்தில் குமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. சட்டங்களை கொண்டுவருவதற்கு முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
மேலும், திமுகவின் ஆர். எஸ். பாரதி தொடர்ந்த இவ்வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.