
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி நகரின் அருகே உள்ள பெரிய கண்மாயில் உள்ள மரங்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இளையான்குடி நகர் பகுதியின் அருகே விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்த இந்த கண்மாய் கோடை காலமானதால், தண்ணீர் வற்றி நாணல் புற்கள் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.
இந்த கண்மாயை மது அருந்துபவர்களும், சமூக விரோதிகளும் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கண்மாயில் உள்ள மரங்கள் தீப்பிடித்து எரியத்தொடங்கின. ஆடிமாதக் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி பெரும் புகை மூட்டத்தை எழுப்பியது.
தகவல் அறிந்து இளையான்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் வந்த 15 தீயணைப்பு வீரர்கள், தென்னை மட்டை மற்றும் இலை தழைகளை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். காற்றின் வேகத்தால் புகை மூட்டம் சூழ்ந்த நிலையில், சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் எரிந்து சேதமடைந்தன. இளையான்குடி பகுதியில் புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இளையான்குடி கண்மாயில் மது பிரியர்கள், சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் காவல்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.