தில்லியில் சிக்கலான இதய பிரச்னையை அனுபவித்து வந்த நாய்க்கு கால்நடை மருத்துவர்கள் வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்து நாயைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்தியாவிலேயே முதல்முறையாக இப்படி ஒரு அறுவை சிகிச்சையை தனியார் கால்நடை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்துள்ளனர்.
பீகிள் இனத்தைச் சேர்ந்த 10 வயதான நாய் ஜூலியட்டுக்கு இதயக் குழாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மித்ரல் வால்வு நோய் எனப்படும் இந்த பிரச்னை 2 ஆண்டுகளாக ஜூலியட் நாய்க்கு இருந்தது என்று சிறிய விலங்குகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பானு தேவ் ஷர்மா தெரிவித்தார்.
மித்ரல் வால்வில் ஏற்படும் பாதிப்பினால், இதயத்தின் இடதுபுறத்தில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இந்த நோய் ஏற்படுவதாக தெரிவித்த மருத்துவர்கள், ட்ரான்ஸ்கதேட்டர் எட்ஜ்-டூ-எட்ஜ் எனப்படும் சிகிச்சை மூலம் அதனை சரி செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.
நாய் வளர்ப்பாளர்கள் கடந்த ஒரு ஆண்டுகாலமாக நாய்க்கு இதய நோய்க்கான மருந்துகளை வழங்கி வந்துள்ளனர். அமெரிக்காவில் விலங்குகளுக்கான இந்த அறுவை சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்ட போது அவர்கள் இதுகுறித்து தெரிந்து கொண்டனர்.
மே 30 அன்று சிகிச்சை முடிந்து, இரு நாட்களுக்குப் பின் இன்று நல்ல உடல் நலத்துடன் நாய் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மித்ரல் வால்வு நோய் இந்தியாவில் உள்ள நாய்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றாகும். மேலும், உலகிலுள்ள நாய்களில் 80 சதவீதம் இதய பிரச்னை இந்த நோயால் வருகிறது. நாய்கள் இறப்பிற்கு இது முக்கியக் காரணமாக இருக்கிறது.
அதிகபட்ச சிகிச்சையாக இதுவரை மருத்துவ உதவிகளே இதற்கு வழங்கப்பட்டு வந்தது. அதுவும், நோயின் வீரியத்தைக் குறைப்பதற்கு மட்டுமே. முழுமையாக இதனைக் குணமாக்க முடியாது. தற்போது இந்த சிக்கலான சிகிச்சை முறையின் மூலம் இதனை குணப்படுத்தியுள்ளோம். உலகில் மிகச்சில மையங்களிலேயே இந்த சிகிச்சை செய்யப்படுகிறது” என்று டாக்டர். ஷர்மா கூறினார்.
கால்நடை மருத்துவத்துறையில் ஆசியாவில் முதல்முறையாகவும், உலகிலேயே இரண்டாவது முறையாகவும் டாக்டர். ஷர்மா குழுவினரால் இந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
“இந்த வகை இதயப் பிரச்னையை சரி செய்வது மனிதர்களுக்கு வரும் இதயக் குழாய் நோய் சிகிச்சை செயல்முறையைப் போன்றதே. இந்த சிகிச்சையின் மூலம் இதய நோயால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற நாய்களைக் குணப்படுத்தலாம்” என்று டாக்டர். ஷர்மா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.