
புது தில்லி: வார இறுதி நாளில் குடியரசுத் தலைவா் மாளிகையில் மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு, இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பல வெளிநாட்டு தலைவர்களை இந்தியா அழைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வென்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக அதிகபட்சமாக 240 இடங்களில் வென்றது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16, பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களைக் கைப்பற்றின.
பெரும்பான்மைக்குத் தேவைப்படும் எண்ணிக்கையான 272 இடங்களை பாஜக தனியாக கைப்பற்றாத நிலையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த நிலையில், மத்தியில் புதிய ஆட்சியமைப்பது மற்றும் அமைச்சரவை இடங்கள் தொடா்பாக பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவா்கள் தில்லியில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமாா், மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். மேலும், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து கூட்டணிக் கட்சிகள் கடிதங்களை அளித்ததாக தகவல்கள் வெளியானது.
இதையடுத்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க உள்ளார்.
மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்கள் அழைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வெற்றிக்கு தொலைபேசியில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு மோடி அழைத்ததாக இலங்கை அதிபரின் அலுவலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேபோன்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசியில் உரையாடிய மோடி, தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைத்ததாகவும், அதை அவர் ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோடியின் பதவியேற்பு விழாவிற்கு நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா , பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமாா் ஜக்நாத் ஆகியோர் அழைக்கப்பட உள்ளதாகவும், முறையான அழைப்பிதழ்கள் வியாழக்கிழமை அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019ஆம் ஆண்டு மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேசம், இலங்கை, மியான்மா், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
மூன்றாவது முறையாக ஜூன் 8 ஆம் தேதி பிரதமராக மோடி பதவியேற்பார் எனத் தெரிகிறது.
இந்தத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாவிட்டாலும், அந்த கட்சி தலைமையிலான கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 293 இடங்களைக் கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.