
சென்னை: விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளருமான விஜயபிரபாகரன் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் சுமார் 4,000 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருப்பினும், வாக்கு எண்ணிக்கையின் போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு தொடர்ந்து டப் கொடுத்து வந்தது அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள விஜயபிரபாகரன் தந்தையை போன்று அரசியலில் தனி செல்வாக்கை பெறுவார் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை, திட்டமிட்டு சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், விஜயபிரபாகரன் தோற்கவில்லை, திட்டமிட்டு சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகரில் வாக்கு எண்ணிக்கையின் போது விஜயபிரபாகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில், மேலிட அழுத்தம் காரணமாக மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது ஏன்?, மற்ற தொகுதிகளில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், விருதுநகர் தொகுதியில் மட்டும் கடைசியாக எண்ணப்பட்டது ஏன்?, விஜயபிரபாகரன் வெற்றி பெறும் நிலையில் 3 அமைச்சர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்து தேவையில்லாத பிரச்னைகளில் ஈடுபட்டது ஏன்?, வாக்கு எண்ணிக்கை முடிக்கப்படாத நிலையில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது எப்படி? என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த பிரேமலதா விஜயகாந்த், மேலிட அழுத்தம் காரணமாக அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஆட்சியத் தலைவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். எப்படியோ, விஜயபிரபாகரனை சூழ்ச்சி செய்து வென்றுவிட்டனர் என தெரிவித்தார்.
மேலும் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு இ-மெயில் மூலம் மனு அனுப்பியுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பெற்ற வாக்கு 3,82,876, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் - 3,78,243, பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் - 1,64,149, நாம் தமிழர் கட்சி டாக்டர் கௌசிக் - 76,122 வாக்குகள் பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.