
தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைக்கு செல்லும் எம்பிக்களில் 9 பேரில் 5 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்களாவர்.
கரூர் தொகுதியில் இருந்து ஜோதிமணி(48), விருதுநகர் தொகுதியில் இருந்து மாணிக்கம் தாகூர்(49), கன்னியாகுமரியில் விஜய் வசந்த் (40) ஆகியோர் இரண்டவது முறையாக மக்களவைக்கு செல்லவுள்ளனர்.
அதேபோல், திருவள்ளூரில் வெற்றி பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் (44), மயிலாடுதுறையில் சுதா(46) ஆகியோர் முதல்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தில் ஆட்சியராக பணியாற்றிய சசிகாந்த் செந்தில் நவம்பர் 2020 இல் காங்கிரஸில் சேர்ந்தார். 2023 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பாஜகவை எதிர்த்து தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார்.
2019 ல் வசந்தகுமார் எம்பி மறைவிற்குபின் நடந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற விஜய் வசந்த், 2024 தேர்தலில் குமரி தொகுதியை தக்கவைத்துக் கொண்டார்.
சுதா, ஜோதிமணி ஆகியோர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்து கொண்டவர்களாவர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது மட்டுமின்றி, புதிய தலைமுறையினருக்கான பாதையை ஏற்படுத்தியுள்ளது.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் எம்பிக்களில் எஸ்சி,எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்களும், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் அதிக அனுபவமில்லாதவர்கள் என்றாலும், மாநில சட்டப்பேரவையில் அனுபவமிக்கவர்கள்.
காங்கிரஸ் சார்பில் எஸ்சி/எஸ்டி தொகுதிகளில் போட்டியிட்டு 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், வெற்றி பெற்ற 13 பெண்களில் 6 பேர் தனித் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், பொதுத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
எஸ்டி மற்றும் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்களாக சஞ்சனா ஜாதவ் (26), பிரியங்கா ஜார்கிஹோலி (27), பிரணிதி ஷிண்டே (43), தனுஜ் புனியா (39), சசிகாந்த் செந்தில் (44), வருண் சௌத்ரி (44) ஆகியோரும், பொதுப் பிரிவில் இருந்து சாகர் காந்த்ரே (26), ராஜா வார்ரிங் (46) ஆகியோரும் எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில், பெரும்பாலும் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் அதிகமாக பிரதிநிதிகளாக மக்களவைக்கு சென்றனர். வட மாநிலங்களில் இருந்து பஞ்சாப் மட்டுமே விதிவிலக்காக இருந்தது.
பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் முதல்வரான சரண்ஜித் சன்னி, ‘இந்தியா’ கூட்டணிக்கு வலுசேர்க்கிறார். பின்னர், குமாரி செல்ஜா மற்றும் வர்ஷா கெய்க்வாட் போன்றவர்கள், மத்திய மந்திரிகளாக பணியாற்றியவர்கள். பஞ்சாபில் அமைச்சராக இருந்த வாரிங் போலவே, தலித்/பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், பொதுத் தொகுதிகளில் இருந்து வெற்றி பெற்றுள்ளனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாய உயர் சாதிகள் மற்றும் எஸ்சி/எஸ்டிகளின் சமூகத்தின் எட்டு உறுப்பினர்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். மேலும் பஞ்சாபில் இருந்து எட்டு பேரும், உ.பி.யில் ஆறு பேரும், ஹரியாணாவிலிருந்து ஐந்து பேரும், பிகாரில் இருந்து நான்கு பேரும் மற்றும் ஜார்க்கண்டிலிருந்து இரண்டு பேர் எம்பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு அமேதியில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், உ.பி.யில் ராகுல் காந்தி வெற்றிபெற்றிருப்பது வடமாநிலங்களில் காங்கிரஸின் பலத்தை நிரூபித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.