
பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் நியமிக்கும் யோசனை நாட்டின் குரலாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) புதிய எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் இன்று (ஜூன் 7) நடைபெற்றது.
பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்றக் குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ராஜ்நாத் சிங் முன்மொழிய, அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் அதனை வழிமொழிய ஒருமித்த குரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், "இந்த முன்மொழிவு இங்கு அமர்ந்து இருக்கும் மக்களின் விருப்பம் மட்டுமல்ல. இது நாட்டின் 140 கோடி மக்களின் முன்மொழிவு. நாட்டை அடுத்த 5 ஆண்டுகள் பிரதமர் மோடி வழிநடத்த வேண்டும் என்பது நாட்டின் குரலாக உள்ளது.
அவரது அமைச்சரவையில் உடன்இருக்கும் நான் மட்டுமல்ல, அனைத்து நாட்டு மக்களும் பிரதமர் மோடியின் திறமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் நம்பகத்தன்மைக்கு சாட்சியாக இருந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அவர் நாட்டிற்கு ஆற்றிய சேவை இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.