

புதுதில்லி: கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில், புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தோ்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றியது. இதில் 240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
எனினும், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக அக்கட்சி ஆட்சியமைக்கவுள்ளது.
இந்தச் சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் கூட்டணி எம்.பி.க்கள் குழு தலைவராக மோடி தோ்வு செய்யப்படவுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் சந்திக்கும் மோடி, தனக்கு ஆதரவளிக்கும் எம்.பி.க்களின் பட்டியலை வழங்கவுள்ளாா்.
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி ஜூன் 9-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பதவியேற்கவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை, வங்கதேசம், நேபாளம், பூடான், மோரீஷஸ் ஆகிய அண்டை நாடுகளின் தலைவா்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோன்று வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் பணியாளர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள்,தூய்மை பணியாளர்களஅ, மத்திய அரசின் திட்டங்களால் பலன் பெற்றவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த இரு தோ்தல்களிலும் தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை அந்த எண்ணிக்கை கிடைக்காத நிலையில், கூட்டணி அரசை பாஜக அமைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.