நீட் தேர்வு குளறுபடி: ஜூன் 24-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஆளும் பாஜக அரசைக் கண்டித்து திமுக மாணவர் அணி சார்பில் ஜூன் 24-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து திமுக மாணவர் அணிச்செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இந்த ஆண்டு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த மே 5-ஆம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 4,750 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதியே முடிவுகள் வெளியாகின.

இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்ற அன்றே வினாத்தாள் கசிந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2021-ஆம் ஆண்டு தேர்வில் 15 பேர் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டார்கள்.

இதற்கு முன்பு கடந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். அதிலும், ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட, நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு என்பது குளறுபிடிகளின் உச்சமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கோப்புப்படம்
நீட் முறைகேடு: ஜூன் 21ல் நாடு தழுவிய போராட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

இவ்வளவு மாணவர்கள் முதலிடம் பிடித்தது, எவ்வாறு சாத்தியமாகும் என்றால், வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளி வருவது, பணம் பெற்றுக் கொண்டு விடைகளை பகிர்வது, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இத்தேர்வு முறையே மோசடி என்று உறுதி செய்கிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது உண்மை என்று மத்திய கல்வித் துறை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார்.

நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. நீட் தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதைத் தான் திமுக தலைவர் அவர்கள் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஆளும் பா.ஜ.க. அரசை கண்டித்து திமுக மாணவர் அணிச் சார்பில் வரும், 24.06.2024 அன்று காலை 09.00 மணியளவில், சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com