புதிய காவல்நிலையங்கள் உள்ளிட்ட 100 அறிவிப்புகள்: பட்டியலிட்டு பேசிய முதல்வர்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டலின் பட்டியலிட்டு பேசினார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்ட புதிய அறிவிப்புகள்:

* கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம்புதூர், திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

* அவை முன்னவர், நீர்வளத் துறை அமைச்சர் நெடுநாள் கோரிக்கை என்று தெரிவித்து, என்னிடம் ஒரு கோரிக்கையைக் கொடுத்தார். அதாவது, பேரணாம்பட்டில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். அது நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும்.

* கொளத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

* கோவை - பொள்ளாச்சி, திருப்பூர் - நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜனநாயக பண்பு தெரியாத அதிமுக : பேரவையில் முதல்வர் பேச்சு

* தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படும். சிறப்பு இலக்குப் படையில் பணியாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

* ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், காயமுற்றவர்களுக்கான நிதி ரூ.10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகரமாக மாற்ற ரூ.5 கோடி மதிப்பில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

* தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.5 கோடியே 21 லட்சம் செலவில் புதிய ஆயப்பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

* தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும், மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

* ஏரல், கருமத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும்.

* சமயபுரம், மேடவாக்கம், பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம், கொளத்தூர் ஆகிய 6 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

*அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய், தந்தையரையும் பயனாளிகளாக சேர்த்திட வேண்டுமென்று காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களிடம் இருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அவற்றை உரிய முறையில் ஆராய்ந்து, அரசு அலுவலர்களைச் சார்ந்து வாழும் அவர்களது பெற்றோருக்கும் மருத்துவக் காப்பீட்டின் பலன் சென்றடையும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பெற்று, தற்போது நடைமுறையில் உள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்படும்.

மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறும் அரசு அலுவலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்திடவும், தேவைப்படும் நெறிமுறைகளை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com