
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள 3880 மீட்டர் உயரமுள்ள புனித குகைக் கோயிலுக்கு பால்டால் மற்றும் நுன்வானில் உள்ள பாதை வழியாக முகாம்களில் இருந்து பக்தர்கள் தங்களது வருடாந்திர அமர்நாத் யாத்திரையை சனிக்கிழமை தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹிந்துகளின் புனித தலங்களில் ஒன்றான அமர்நாத்துக்கு செல்லும் 52 நாட்கள் நடைபெறும் யாத்திரை சனிக்கிழமை( ஜூன் 29) தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடைகிறது.
மலையேற்றம் சார்ந்த இந்த பயணத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்கின்றனர். ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்தின் தகவல்படி வழக்கமாக சந்தன்வாரி பகுதியில் தொடங்கும் யாத்திரை அமர்நாத் சென்று திரும்ப 5 நாள்கள் எடுக்கும்.
குளிர்க்கட்டியாக சிவலிங்கம் உறைந்திருக்கும் புனித குகை இந்த பகுதியில் அமைந்துள்ளது. இயற்கையாக அமைந்துள்ளதாக கருதப்படும் இங்கு வழிபட மக்கள் வருகை தருகின்றனர்.
அனந்த்நாக்கில் உள்ள பராம்பரிய 48 கி.மீ நூன்வான்-பஹல்காம் பாதை வழியாகவும் மற்றும் கந்தர்பாலில் 14 கி.மீ பால்டால் பாதை வழியாகவும் சனிக்கிழமை அதிகாலை யாத்திரை தொடங்கியது.
இரண்டு பாதைகளில் உள்ள பக்தர்களை அந்தந்த காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கொடியசைத்து துவக்கி வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை காலை ஜம்முவின் பகவதி நகரில் உள்ள யாத்திரி நிவாஸில் இருந்து 4,603 பக்தர்களைக் கொண்ட முதல் குழுவின் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பிற்பகலில் ஸ்ரீநகர் வந்தடைந்த அமர்நாத் 4,603 பக்தர்களையும் தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் காசிகுண்ட் பகுதியில் உள்ள நவ்யுக் சுரங்கப்பாதையில் காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இயற்கையாக உருவான குளிர்க்கட்டியாக உறைந்திருக்கும் பனி லிங்கம் உள்ள குகைக் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
52 நாள்கள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை சுமூகமாக நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு சுமார் 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் குகைக் கோயிலுக்குச் செல்லும் இரண்டு வழிகளிலும் 125 சமூக சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு சேவை செய்வார்கள்.
காவலர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் மற்றும் பிற துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வான்வழி கண்காணிப்பும் மற்றும் இரு வழித்தடங்களில் பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
52 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.