லடாக் வெள்ளப்பெருக்கில் 5 ராணுவ வீரர்கள் பலி: ராகுல் காந்தி இரங்கல்
புது தில்லி: லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே மந்திர் மோர் அருகே வெள்ளிக்கிழமை மாலை டி-72 ரக ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நீர் மட்டம் திடீரென அதிகரித்ததன் காரணமாக ராணுவ டேங்கர் விபத்துக்குள்ளானது. இதில், டேங்கரில் இருந்த இளநிலை கமிஷனர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது, மற்றவர்களைத் தேடும் பணி நடந்து வருவாதாக" பாதுகாப்பு அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வீரர்களின் உடல்களும் சனிக்கிழமை அதிகாலை மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெள்ளப் பெருக்கில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "லடாக்கில் ஆற்றைக் கடக்கும் ராணுவப் பயிற்சியின் போது திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களுக்கும் எனது பணிவான அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்" தெரிவித்துக்கொள்கிறேன்.
"இந்த துயரமான நேரத்தில் அவர்களுடன் நாங்கள் நிற்கிறோம். அவர்களது அர்ப்பணிப்பு, சேவை மற்றும் தியாகத்தை நாடு எப்போதும் நினைவில் வைத்திருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், வெள்ளப் பெருக்கு விபத்தில் சிக்கி நமது வீரர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
மேலும் "இந்த துயரமான நேரத்தில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். வீரம் மிக்க நமது வீரர்களின் முன்மாதிரியான சேவைக்கு வணக்கம் செலுத்துவதில் தேசம் ஒன்றுபட்டு நிற்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.