நீட் முறைகேடு... குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது

நீட் தேர்வு முறைகேடு புகாரில் குஜராத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் தீட்சித் படேலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோத்ரா: குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மே மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்)தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அதன் உரிமையாளரை ஞாயிற்றுக்கிழமை மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்(சிபிஐ) கைது செய்துள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) தோ்வு தொடங்குவதற்கு முன்பே பிகாா் மாநில மையத்தில் வினாத்தாள் கசிந்த சம்பவமும் ஒட்டுமொத்த மாணவர்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாகியது.

இதனிடையே, மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது.நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது என பல்வேறு புகார் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்தது.

வினாத்தாள் கசிவு வழக்கை பிகாா் காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், "இந்த வழக்கை குஜராத் அரசு சிபிஐயிடம் ஒப்படைத்தால், சிபிஐ குழு அவரை (தீக்ஷித் படேல்) அகமதாபாத்தில் உள்ள ஒரு நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்" என்று தாக்கூர் கூறினார்.

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து மத்திய கல்வித் துறை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில், நீட் நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), முதல் தகவல் அறிக்கை(எஃப்ஐஆர்) பதிவுசெய்து ஜூன் 23 விசாரணையைத் தொடங்கியது.

விசாரணைக்காக சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு இந்த வழக்குக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சிபிஐ விசாரணைக் குழுக்கள் பிகாரின் பாட்னா, கோத்ரா பகுதிகளுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் முறைகேடு தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில் சிபிஐ விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இளநிலை நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டம் கோத்ரா அருகே உள்ள ஜெய் ஜலராம் தனியார் பள்ளியில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் பள்ளியின் உரிமையாளர் தீட்சித் படேலை கைது செய்துள்ளனர்.

பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து படேல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக அரசு வழக்குரைஞர் ராகேஷ் தாக்கூர் தெரிவித்தார்.

அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு அகமதாபாதில் உள்ள உள்ளூா் நீதிமன்றத்துக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்படும் ஆறாவது நபர் படேல், இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவைப்பதாக கூறி குறைந்தது 27 மாணவர்களிடம் தலா ரூ.10 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

நீட் முறைகேடு தொடா்பாக தற்போது வரை 6 போ் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோப்புப்படம்
பூரண மது விலக்கே தீர்வு:தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

ஏற்கனவே வதோதராவைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் பர்சுராம் ராய், ஜெய் ஜலாராம் பள்ளி முதல்வர் புருஷோத்தம் ஷர்மா, பள்ளி ஆசிரியர் துஷார் பட் மற்றும் இடைத்தரகர்கள் விபோர் ஆனந்த் மற்றும் ஆரிப் வோஹ்ரா ஆகியோர் பஞ்சமஹால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராய் தவிர மற்ற நான்கு குற்றவாளிகளை சிபிஐ காவலில் வைக்கக் கோரியது. இதையடுத்து சர்மா, பட், ஆனந்த் மற்றும் வோஹ்ரா ஆகியோரை ஜூலை 2 வரை சிபிஐ காவலில் வைக்க கோத்ரா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு சட்டவிரோதமான வழிகளைப் பின்பற்றத் தயாராக இருக்கும் விண்ணப்பதாரர்கள் ஜெய் ஜலாராம் பள்ளியைத் தேர்வு மையமாகத் தேர்வுசெய்யுமாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியது சிபிஐயின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காக சட்டவிரோதமான முறையில் முன்கூட்டியே பணம் செலுத்திய அல்லது பணம் செலுத்த ஒப்புக்கொண்ட 27 பேர்களில், மூன்று பேர் மட்டுமே தேர்ச்சி மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற முடிந்தது, மீதமுள்ள 23 பேர் தோல்வியடைந்தனர்.

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான அடுத்த விசாரணை ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com