நாக்பூர்: நிதின் கட்கரியின் ‘கோட்டை’ தகர்க்கப்படுமா?

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போட்டியிடும் நாக்பூர் மக்களவைத் தொகுதி பற்றிய அலசல்!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

நாக்பூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த முறை மிகக் கடினமான போட்டியை எதிர்கொள்ளவிருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள் மத்தியில் நிலவும் அரசுக்கு எதிரான தற்போதைய மனநிலையும் கட்கரியை எதிர்த்துப் போட்டியிடும் வலுவான காங்கிரஸ் வேட்பாளரான விகாஸ் தாக்கரேயும்தான் இதற்கு முக்கிய காரணங்கள்!

தவிர, இந்த முறை இந்தத் தொகுதியில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதி அமைப்பும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கிறது.

உள்ளூர் எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் வேட்பாளர் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் நாக்பூர் நகரத் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். வரும் ஏப். 19 ஆம் தேதி மேலும் 3 தொகுதிகளுடன் நாக்பூர் மக்களவைத் தொகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
தேசிய கட்சி அந்தஸ்தை தக்கவைக்குமா மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?

பாரதிய ஜனதாவின் வலுவான வேட்பாளரான கட்கரி, 2014 மக்களவைத் தேர்தலில் நாக்பூரில் 26.2 சதவிகித வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளரான விலாஸ் முத்தம்வர் 27.9 சதவிகிதம் பெற, பதிவான வாக்குகளில் 54 சதவிகித வாக்குகளைப் பெற்றார் நிதின் கட்கரி.

ஆனால், 2019 மக்களவைத் தேர்லில் கட்கரியின் வெற்றிக்கான வித்தியாசம் 18.3 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

கடந்த பத்தாண்டுகளில் நாக்பூரில் மிகவும் புகழ்பெற்ற நபராக மாறிவிட்டிருக்கும் நிதின் கட்கரி, காங்கிரஸின் செல்வாக்கு மிக்கதாக இருந்த பகுதியைத் தன்னுடைய கோட்டையாக மாற்றி வைத்திருக்கிறார், இன்னும் சொல்லப் போனால் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கைவிட கட்கரியின் தனிப்பட்ட செல்வாக்குதான் அதிகம்.

பிராமணர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், எல்லாருடனும் இயல்பாகப் பழகும் இவருடைய குணமும் தாராளமான அரசியலும் இவருக்கு அனைத்துச் சாதியினரிடையேயும் ஆதரவாளர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது.

தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
தேர்தல் பிரசாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மேலும், நாக்பூர் நகருடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிருந்தும் அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்தி வைத்துள்ளார் நிதின் கட்கரி.

அனைத்துத் தரப்பினருக்குமானவர் என்ற தகுதியைக் கட்கரி பெற்றிருந்தாலும் இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் தாக்கரேயின் வலுவான போட்டி காரணமாக வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்காது.

மேலும் பத்தாண்டுகளாகப் பதவியிலிருந்த நிலையில் எதிர்ப்பு உணர்வும் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியும் கட்கரிக்குப் பாதகமாக இருக்கிறது. தவிர, நகரில் தாக்கரேவுக்கு வலுவான தொடர்புகள் இருக்கின்றன. இது தேர்தல் பிரசாரத்தில் வலுவாக எதிரொலிக்கும் என்றும் அரசியல் பார்வையாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

மராட்டா சாதியின் துணைப் பிரிவுகளில் ஒன்றான குன்பியைச் சேர்ந்தவர் தாக்கரே. தொகுதியில் கணிசமான வாக்காளர்களைக் கொண்ட இந்தச் சாதியினர் காலப் போக்கில் பாரதிய ஜனதா ஆதரவாளர்களாக மாறிவிட்டனர். ஆனால், இவர்களை மீண்டும் காங்கிரஸுக்கு தாக்கரே கொண்டுவந்துவிடுவார் என்று நம்பப்படுகிறது. தொகுதியில் தலித் மக்களும் முஸ்லிம்களும் கணிசமான அளவுக்கு இருக்கின்றனர். இவர்களுடைய ஆதரவும் திசை மாறினால் நாக்பூரில் நிதின் கட்கரி வெற்றி பெறுவது கடினமானதாகவே இருக்கும் என்று மற்றொரு பார்வையாளர் தெரிவிக்கிறார்.

இன்னொரு பக்கம் பார்த்தால், தாக்கரேயின் தொடர்புகளையும் சாதிக் கணக்குகளையும் எதிர்கொள்ள, நிதின் கட்கரி முழுவதுமாக தன்னுடைய நல்ல மனிதர் என்ற பெயரையும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தொடர்புகளையுமே நம்பியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
சென்னை: குறையும் நீர்நிலைகள்! பெரும் பற்றாக்குறை ஆபத்து?

நாக்பூர் தொகுதி பல காரணங்களால் பாரதிய ஜனதாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தத் தொகுதியில்தான் அகில இந்தியாவுக்குமான ஆர்எஸ்எஸ் தலைமையகம் இருக்கிறது. கட்கரியின் தாராளப் போக்கு, முற்போக்கு அரசியல், பிரதமர் பதவி மீதுள்ள ஆசை போன்றவற்றின் காரணமாக சில தலைவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதால், இந்த முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனேகமாக கட்கரிக்குத் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றே பேச்சுகள் நிலவின.

ஆனால், மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேர்தலில் நிதின் கட்கரிக்கு எதிராக ‘மறைமுகமாக சில சக்திகள்’  செயல்படும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் ஒதுக்கிவிட முடியாது என்று நாக்பூரின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார்.

இரண்டு முறை வெற்றி பெற்ற நாக்பூர் கோட்டையைத் தகர்க்கப்படாமல் தக்க வைத்துக் கொள்வாரா, நிதின் கட்கரி?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com