சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

இந்தியாவில் 2016 முதல் 2021 வரை, 9600-க்கும் மேற்பட்ட சிறார்கள் வயது வந்தோருக்கான சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில், கடந்த ஜனவரி 1, 2016 முதல் டிசம்பர் 31, 2021 வரை 9,600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தவறாக சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்திய சிறைகளில் சிறைபடுத்தப்பட்ட குழந்தைகள்’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. சட்ட உரிமைகள் அமைப்பான ’ஐப்ரோபோனோ’ (iProbono) நடத்திய இந்த ஆய்வு, இந்தியாவின் சிறார் நீதி அமைப்பின் பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அந்த ஆய்வின் தரவுகளிம் அடிப்படையில், ஜனவரி 1, 2016 முதல் டிசம்பர் 31, 2021 வரை குறைந்தது 9,681 சிறார்கள் சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் தவறாக அடைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சீறார் நீதி வாரியத்தால் அடையாளம் காணப்பட்டு சராசரியாக ஆண்டுக்கு 1,600 சிறார்கள், சிறையிலிருந்து சிறார் இல்லங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

மொத்தம் 570 சிறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வைத்த கோரிக்கைகளுக்கு, 285 மாவட்ட, மத்திய சிறைகளில் பெறப்பட்ட பதில்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!
ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விளக்கம்

’மேலும், 749 மற்ற சிறைகளான துணைச் சிறைகள், பெண்கள் சிறைகள், திறந்தவெளிச் சிறைகள், சிறப்புச் சிறைகள், சீர்திருத்தப் பள்ளிகள் மற்றும் பல சிறைகளில் நாங்கள் தகவல்களை பெறவில்லை.

அடையாளம் காணப்பட்ட, வயது வந்தோருக்கான சிறையில் இருந்து மாற்றப்பட்டவர்களின் தரவுகள் மட்டுமே ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குற்றம் செய்தபோது சிறாராக இருந்தவர்கள், பார்வையாளர்கள், பெற்றோர்களால் அடையாளம் காணபட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், நாகாலாந்து, யூனியன் பிரதேசம் லடாக் போன்ற பல மாநிலங்கள் இது தொடர்பான கோரிக்கைகளுக்கு சரியான பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

பதிலளித்த மாநிலங்களின் புள்ளிவிவரங்கள் இந்தப் பிரச்னையின் ஆபத்தான பக்கத்தை காட்டியுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில், 71 சதவீத சிறைகள் இருந்து பெறப்பட்டத் தரவுகளில், 2,914 சிறார்கள் சிறைகளில் இருந்து சிறார் இல்லங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பீகாரில், 34 சதவீத சிறைகளில் இருந்து பெறப்பட்டத் தரவுகளில், 1,518 சிறார்கள் வயது வந்தோருக்கான சிறைகளில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.

மகராஷ்டிராவில், 35 சதவீத சிறைகள் அளித்த தரவுகளின் படி 34 சிறார்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

தில்லி அரசு சிறார் நீதிகளுக்கு, மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட சிறை அமைப்பைக் கொண்டுள்ளதாகவும், தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறார்கள் வயது வந்தோருக்கான சிறைகளில் அடைக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஹரியானாவில், 90 சதவீத சிறைகளில் பெறப்பட்ட தரவுகளில், 1,621 சிறார்களும், ராஜஸ்தானில் 51 சதவீத சிறைகளில் பெறப்பட்ட தரவுகளில், 108 சிறார்களும், சத்தீஸ்கரில் பெறப்பட்ட 44 சதவீத சிறைகளின் தரவுகளில், 159 சிறார்களும், ஜார்க்கண்ட்டில் பெறப்பட்ட 60 சதவீத சிறைகளின் தரவுகளில், 1,115 சிறார்களும் சிறைகளில் இருந்து சிறார் இல்லங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவிலான தகவல்களே தரப்பட்டுள்ளதாகவும், மேலும், எந்த சிறார்களும் சிறைகளில் இருந்து சிறார் இல்லங்களுக்கு மாற்றப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!
மிகப்பெரிய தோல்வியை நோக்கி மஸ்க்: விவேக் வாத்வா

மாநில சிறைகளில் கொடுக்கப்பட்ட தரவுகள் பெரும்பாலும் சிறார் நீதி அமைப்பின் தரவுகளுடன் முரணாக உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்ட தரவுகளில் யூனியன் பிரதேசங்களான அந்தமான், நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவுகளின் அதிகார வரம்புகள் மாவட்ட மற்றும் மத்திய சிறைகளின் வரம்புகளுக்குள் வராததால் அவை விலக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com