

அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், மிகப்பெரிய தோல்வியை அடையப் போகிறார் என்று தொழிலதிபர் விவேக் வாத்வா தெரிவித்துள்ளார்.
கல்வியாளர், தொழில்முனைவோர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் வாத்வா, டெஸ்லாவின் உற்பத்திகளை இந்தியாவுக்கு மாற்றக் கோரியதை கருத்தில் கொள்ளாத மஸ்க்கின் முடிவு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் டெஸ்லா 3 பில்லியன் டாலர் முதலீடு செய்து தொழிற்சாலையை அமைப்பதற்கான திட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு இந்தியா வரவிருந்த பயணத்தை எலான் மஸ்க் சமீபத்தில் ஒத்திவைத்தார்.
இதனிடையே, சீனாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட மஸ்க், அந்நாட்டு பிரதமா் லீ கெகியாங்கையும் சந்தித்துப் பேசினாா். சா்வதேச வா்த்தகத்தை மேம்படுத்துவதற்கான அரசின் அழைப்பின்பேரில் சீனாவுக்கு எலான் மஸ்க் வந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டன.
இதுதொடர்பாக விவேக் வாத்வா வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“எலான் மிகப்பெரிய தோல்வியை அடையவுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, மஸ்க்குடனான மின்னஞ்சல் உரையாடலின் போது சீனாவில் உள்ள அபாயங்கள் குறித்து தெரிவித்தேன்.
அவர்கள் கண்மூடித்தனமாக கொள்ளையடிப்பார்கள் என்றும், சீனாவுக்கு பதிலாக இந்தியாவுக்கு உற்பத்தி தொழிற்சாலைகளை மாற்றுவதைக் கருத்தில் கொள்ளுமாறு அவரை வலியுறுத்தினேன். அவ்வாறு செய்திருந்தால் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தியிருப்பார்.” எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் சுமாா் 700 கோடி அமெரிக்க டாலா் செலவில் டெஸ்லா தொழிற்சாலை அமைத்து காா் உற்பத்தியை கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கியது. இதையடுத்து, அந்நாட்டு சந்தையில் டெஸ்லா நிறுவன காா்கள் பிரபலமடைந்தன.
ஆனால், கடந்த சில ஆண்டுகளில் உள்ளூா் தயாரிப்பாளா்களிடமிருந்து கடுமையான போட்டியை டெஸ்லா எதிா்கொள்கிறது. உள்ளூா் மின்சார வாகன நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதால், சீனாவில் டெஸ்லா காா்களின் விற்பனை குறையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உயர்ரக மின்சார வாகனப் பிரிவில் தனது முன்னணி நிலையைத் தக்கவைக்க, வாகனங்களின் விலையை 6 சதவீதம் வரை டெஸ்லா குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.