
ஒருவரின் உடல்நலம் எப்படி இருக்கிறது என்பதை அவரது விரல் நகங்களே சொல்லிவிடும். ஆனால், அந்த மொழியை புரிந்துகொண்டு அதுசொல்வதைக் கேட்பதுதான் நமது கடமை. விட்டுவிட்டால் ஆபத்துதான்.
உங்கள் விரல் நகரங்களைப் பாருங்கள். அது ஒழுங்காக ஒன்றுபோல வளர்கிறதா? இல்லையா? அப்போது உங்கள் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதைத்தான் அது சொல்கிறது என்று புரிந்துகொள்ளுங்கள்.
கைப்புண்ணுக்கு கண்ணாடியா என்பார்கள். அதுபோலத்தான், உங்கள் உடல்நலனை விரல் நகங்களே காட்டும்போது அதை புறக்கணிக்கலாமா?
விரல் நகத்தில் வெள்ளைக் கோடு, நீலத் திட்டு, வளையும் நகம் ஆகியவை உங்கள் உடல்நலன் பிரச்னையைத்தான் காட்டுகின்றன.
நகத்தின் நிறம், வடிவம், விரிசல், நிறம் மாறுதல், பள்ளம், வரி வரியாக கோடுகள் விழுதல் போன்றவையும் பல நோய்களின் அறிகுறிகளே. எனவே, நகத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது உங்களுக்குக் கொடுக்கும் சிக்னல்தான். உஷாராகுங்கள்.
உங்கள் தோலின் ஒரு பகுதியே நகங்கள். அது புரோட்டின் கெரட்டினால் ஆனது. உடலின் பழைய செல்கள் இறந்து புதிய செல்கள் உருவாகும். பழைய செல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடினமான நகரமாக மாறி விரல் நுனிகள் வழியே வெளியேறுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
எனவே, உங்கள் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அங்கிருந்து வரும் செல்களும் பாதிக்கப்பட்டு, நகமாக மாறி வெளியேறும்போது அந்த பாதிப்பு ஏதேனும் ஒரு வகையில் வெளிப்படுகிறது.
அதனால்தான், நோயாளிகளின் விரல் நகங்களைப் பார்த்தே, அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது எந்தவிதமான சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை பல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கண்டறிந்துவிடுவார்களாம்.
சரி நகங்களில் இதுபோன்ற மாற்றங்களைப் பார்த்ததும் என்ன செய்ய வேண்டும். நம்மால் அப்படி எதையும் கண்டுபிடித்துவிட முடியாது. ஆனால், மருத்துவர்களிடம் சென்று இதுபற்றி கூறி அவர்கள் எடுக்கும் பரிசோதனை முடிவில் ஏதேனும் நோய்கள் இருந்தால் அதற்குண்டான சிகிச்சையைப் பெற்று உடனடியாக அதனை சரி செய்துகொள்ளலாம்.
பொதுவாக நகங்கள் எப்படித்தான் இருக்க வேண்டும், அனைத்து நகங்களும் ஒன்றுபோல இளஞ்சிவப்பு நிறுத்தில், நேராக, எந்த திட்டுக்களும் இல்லாமல், நிற மாற்றங்கள் தெரியாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, நகங்களின் ஆரம்பப் பகுதியில் நிலா பிறை போன்ற வடிவம் இருக்க வேண்டும். இப்படியே இருக்கும் நகங்களில் ஒருநாள் மாறுபாடு ஏற்படும்போது அதனை கவனிக்கத்தானே வேண்டும் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்.
சிலருக்கு நகங்களில் வெளியிலிருந்து ஏற்பட்ட பாதிப்புகளால் ஏதேனும் நிறமாற்றம், வடிவ மாற்றம் ஏற்படலாம். அதாவது ரசாயனங்களில் வேலை செய்பவர்கள், கை விரல்களைக் கொண்டு கடினமான வேலைகளைச் செய்பவர்களுக்கு நகங்கள் அடிக்கடி உடைவது, நிற மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றுக்கும் உடல்நலனுக்கும் தொடர்பிருக்காது.
இன்னும் ஒரு படி மேலே சொன்னால், மன அழுத்தம், மனநலப் பிரச்னைகளைக் கூட விரல் நகங்கள் காட்டிவிடுமாம். ஒருவேளை விரல் நகங்கள் மஞ்சள் அல்லது சிவப்பு அல்லது புள்ளிகள், கோடுகள் ஏற்பட்டால் அதை கவனிக்க வேண்டும். நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்பதையே அது காட்டுகிறது.
நகங்களில் மாற்றம் ஏற்பட மருத்துவக் காரணங்கள், உடல்நலப் பாதிப்புகள், நோய்கள் என பல காரணங்கள் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கைவிரல் நகங்கள் மட்டுமில்லையாம்.. கால் விரல் நகங்களுக்கும் இதே விதிகள் பொருந்துமாம். ஆனால், கை விரல் நகங்களைக் காட்டிலும் கால் விரல் நகங்கள் மெதுவாகத்தான் வளர்கின்றன. ஒரு மாதத்துக்கு கைவிரல் நகங்கள் 3.5 மில்லி மீட்டர் வளர்ந்தால், கால் விரல் நகங்கள் 1.6 மில்லி மீட்டர்தான் வளருமாம்.
என்ன பிரச்னை?
நகங்கள் வளைந்தால்.. உடலில் இரும்புச் சத்து குறைபாடு இருக்கலாம்.
நகங்களில் பிளவுகள்.. பூஞ்ஞை பாதிப்புகள், ஹைப்பர் தைராய்டு இருக்கலாம். தோல் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
வெள்ளை திட்டுகள்.. இரும்புச் சத்து குறைபாடு, பூஞ்ஞை பாதிப்பு
மஞ்சள் நிறம்.. சுவாசக் கோளாறுகள் இருக்கலாம்.
சிறு வெற்றிட புள்ளிகள்.. சரும நோய்கள் ஏற்படலாம்.
வெளிரிய நிலையில் நகங்கள்.. கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு, இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
பாதி வெள்ளைநிறம்.. சிறுநீரகப் பாதிப்புகள்.
உடலில் போதிய சத்துகள் குறையும்போதும் நகங்கள் தங்களது தோற்றத்தில் மாற்றத்தை வெளிப்படுத்தும். எனவே, இரும்புச் சத்து உள்ளிட்ட அனைத்து சத்துகளும் உணவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
அடிக்கடி ரசாயனம் கலந்தசோப்புகளைப் பயன்படுத்தி கை கழுவுதல், நகங்களைக் கடித்தல், மோசமான கருவிகளைக் கொண்டு நகங்களை நறுக்குதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.