
அம்பாசமுத்திரம்: பாபநாசம் அருகே வேம்பையாபுரம் கிராமத்தில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் வைத்தக் கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமங்களான வேம்பையாபுரம், திருப்பதியாபுரம், அனவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. மேலும் வேம்பையாபுரம், அனவன்குடியிருப்புப் பகுதிகளில் வளர்ப்பு விலங்குகளான ஆடு, நாய் உள்ளிட்டவற்றை பிடித்துச் சென்றன. மே 15 ஆம் தேதி வேம்பையாபுரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் வீட்டில் கட்டிப் போட்டிருந்த ஆட்டைத் தூக்கிச் சென்ற சிறுத்தை வனப்பகுதியில் ஆட்டின், இரைப்பை உறுப்புகளை உண்டுவிட்டு எச்சத்தைப் போட்டுச் சென்றது.
இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் இளையராஜா உத்தரவின் பேரில் வனச்சரகர் சத்யவேல் அறிவுறுத்தலில் வனத்துறையினர் அனவன்குடியிருப்பு, வேம்பையாபுரம் பகுதிகளில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு வேம்பையாபுரம் பகுதியில் வனத்துறையினர் வைத்தக் கூண்டில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க சிறுத்தை ஒன்று சிக்கியது.
கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவினர் சோதனை செய்தபின் மணிமுத்தாறு வனப்பகுதியில் விடுவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
சிறுத்தை அட்டகாசத்தால் அச்சத்தில் இருந்த வேம்பையாபுரம், திருப்பதியாபுரம் பகுதி பொதுமக்கள் சிறுத்தை பிடிபட்டதையடுத்து நிம்மதியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.