
கனமழை மற்றும் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் உதகை மலை ரயில்கள் சேவை திங்கள்கிழமையும் (மே 20) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் கடந்த 2 வாரகமாக கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 நாள்களுக்கு மிக கனமழை பெய்யும். மேலும், ஆரஞ்சு அலா்ட் எச்சரிக்கையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால் மலை ரயில் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்ததால் தண்டவாளங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:
நீலகிரி மலை ரயிலின் கல்லாா் - ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு மற்றும் ரயில் பாதையில் பாறைகள் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே கடந்த மே 18,19-ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - உதகை இடையே இயங்கும் மலை ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை (மே 20) வரை ரயில்கள் சேவை ரத்து நீடிக்கும்.
ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு முன்பதிவு செய்தவா்களுக்கு பயணச்சீட்டின் கட்டணத் தொகை முழுவதுமாக திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.