

மும்பையில் அமலாக்கத்துறையால் மே.16 அன்று பணமோசடி தடுப்புச் சட்டம் (பி.எம்.எல்.ஏ) 2002 -ன் கீழ் ரூ.263 கோடி வருமான வரி திருப்பி செலுத்துவதில் மோசடி செய்ததாக ராஜேஷ் பிரிஜ்லால் பத்ரேஜா என்பவரைக் கைது செய்துள்ளதாக அமலாக்கத்துறை அலுவலகம் சார்பில் நேற்று(மே.19) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வரி மோசடியில் பெற்றப் பணமான ரூ. 55.50 கோடியை இந்தியாவிற்கு வெளியே அனுப்பி சுற்றலில் விட்டு, அந்த பணத்தை துபையிலிருந்து இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்களில் முதலீடு எனும் பெயரில் உள்ளே கொண்டு வருவதற்கு உதவியதில் முக்கிய பங்காற்றியதற்காக பத்ரேஜாவைக் கைது செய்துள்ளதாக அமலாக்கத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தனாஜி மண்டல் அதிகாரி, பூஷன் பாட்டில், ராஜேஷ் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வருமான வரி ரூ.263.85 கோடி டிடிஎஸ் பணத்தை மோசடி செய்ததாக அதிகாரி உள்பட மற்ற் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 1860, ஊழல் தடுப்புச் சட்டம் 1986 மற்றும் மேலும் பல பிரிவுகளின் கீழ் மத்தியப் புலனாய்வுத் துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.
இந்த விசாரணையில் ரூ.55.50 கோடி மோசடி பணத்தை, ஹவாலா மூலம் இந்தியாவிற்கு வெளியே அனுப்பி, அதனை ஷெல் நிறுவனங்களின் மூலம் முதலீட்டு பணமாக மாற்ற அதிகாரிக்கு பத்ரேஜா உதவியுள்ளதாக அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது.
மோசடி பணத்தை ஹவாலா மூலம் இந்தியாவிலிருந்து வெளியே கொண்டு சென்ற பின், துபையில் உள்ள நபரின் உதவியுடன் அந்த பணத்தை நிறுவனங்களின் வழியே முதலீடாக மாற்ற அதிகாரிக்கு பத்ரஜா உதவியுள்ளார்.
மும்பை மற்றும் குருகிராமைச் சேர்ந்த இரு இந்திய நிறுவனங்களின் பெயரில் வெளிநாட்டிலிருந்து முதலீடு என்னும் பெயரில் மோசடி பணத்தில் ஒரு பகுதியை பத்ரேஜா முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முதலீடு செய்யப்பட்ட இரு இந்திய நிறுவனங்களிலும் மே.16 அன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, டிஜிட்டல் சாதனம் ஒன்று கைபற்றப்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 -ன் கீழ் பத்ரேஜாவைக் கைது செய்துள்ள அமலாக்கத்துறை, அவரை மே.17 அன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. நீதிமன்றம் பத்ரேஜாவை மே.22 வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
”இந்த வழக்கில் இதுவரை, ரூ. 168 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. செப்டம்பர் 11, 2023 -ல் மண்டல் அதிகாரி உள்பட 10 நபர்கள் மீது இந்த மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தால் நடத்தப்பட்டு வருகிறது” என்று அமலாக்கத்துறை அதிகாரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.