வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தலின் முதல் 5 கட்ட வாக்குப்பதிவு விவரங்களைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை முறையாக வெளியிடாததால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானத் தேர்தல் ஆணையம் தற்போது முதல் 5 கட்ட வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. 7 கட்டங்களாக நடத்தப்படும் வாக்குப்பதிவில் இன்றுடன் 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடந்துள்ளன. இதில், தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட கால தாமதம் ஏற்படுத்துவதாகவும், வாக்குப்பதிவு முடிந்து 48 மணி நேரத்துக்குள் இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை வாக்குச்சாவடி வாரியாகத் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும், வாக்குப்பதிவு விவரம் அடங்கிய 17-சி படிவத்தைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்: மேனகா காந்தி

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு, 17-சி படிவத்தின் அடிப்படையில் வாக்கு சதவீதம் வெளியிடப்படுகிறதா என்றும் தேர்தல் ஆணையத்துக்கு அவ்வாறு வெளியிடுவதில் சிக்கல் ஏதேனும் உள்ளதா என்றும் கேள்வியெழுப்பி, பின் வழக்கை ஒத்திவைத்தது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த அமர்வில், ‘இதுபோன்ற சந்தேகங்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் எழுப்பப்படுகின்றன. இதனால், மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மைக் குறைகிறது. தற்போதைய தேர்தலில் வாக்குப்பதிவு குறைவதற்கும் இத்தகைய மனுக்களே காரணம். எனவே, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரங்கள்
தமிழ்நாட்டின் தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரங்கள்

”தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் பல சந்தேகங்கள் எழுகின்றன. அதனால்தான் தேர்தல் ஆணையத்திற்குச் செல்லாமல் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தவறாகப் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மனுதாரர் தரப்பு வாதிட்டது.

இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் ‘மக்களவைத் தேர்தல் 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது. தேர்தல் முடிந்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 17-சி படிவத்தின்படி வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

இந்த நிலையில், கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த தேர்தல் ஆணையம், தீர்ப்பு வெளியான ஒரே நாளில் 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது.

இதுவரை நடந்த வாக்குப்பதிவுகளின் சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வந்த தேர்தல் ஆணையம், தற்போது 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவின், மாநிலம், தொகுதி, வாக்குச்சாவடி வாரியாக மொத்த வாக்குப்பதிவு விவரங்களை அட்டவணையாக வெளியிட்டுள்ளது. இதனைப் பதிவிறக்கம் செய்து பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பதிவான வாக்குகளில் எந்த மாற்றங்களையும் செய்ய சாத்தியமில்லை என்றும், தொகுதி வாரியாக வாக்குப்பதிவுத் தரவுகளின் வடிவமைப்பை மேலும் மேம்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்குப்பதிவு விவரங்களை இந்த இணைப்பில் https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com