
ஹோட்டல் அதிபர் ஜெயா ஷெட்டி கொலை வழக்கில் கேங்ஸ்டர் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய மும்பை, காம்தேவி பகுதியிலுள்ள கோல்டன் கிரௌன் ஹோட்டலின் அதிபரான ஜெயா ஷெட்டியை மே. 4 2001-ம் ஆண்டு அதே ஹோட்டலில் வைத்து சோட்டா ராஜனின் ஆட்கள் இருவர் சுட்டுக் கொன்றனர்.
இந்தக் கொலை வழக்கில் ஹோட்டல் மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையில், சோட்டா ராஜன் குழுவைச் சேர்ந்த ஹேமந்த் புஜாரி என்பவர் ஜெயா ஷெட்டியிடம் பணம் கேட்டுத் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், பணம் தர மறுத்ததால் கொலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.
பல்வேறு கொலை, கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் தொடர்பான வழக்குகள் சோட்டா ராஜன் மீது பதியப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் அவர் மீதும், மற்ற குற்றவாளிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இன்று சிறப்பு நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் நீதிபதி ஏ.எம்.பாட்டீல், சோட்டா ராஜனை குற்றவாளி என்று தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
வழக்கு குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த வழக்கின் இதற்கு முன்பான விசாரணைகளில் 3 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.
பத்திரிகையாளர் ஜே டே 2011-ல் கொல்லப்பட்ட வழக்கில் சோட்ட ராஜன் ஆயுள் தண்டனைக் கைதியாக ஏற்கனவே திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.