
ரூர்கேலா/புவனேஸ்வர்: ஒடிசாவின் ரூர்கேலாவில் வெப்ப அலைக்கு 7 மணி நேரத்தில் 10 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரும்பு நகரமான ரூர்கேலாவில் அதிகபட்ச வெப்பநிலை 46.1 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால், ரூர்கேலா அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை ஏழு மணி நேரத்திற்குள் பத்து பேர் வெப்ப அலைக்கு பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாழக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கத் தொடங்கிய அடுத்த ஆறரை மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
இறப்புக்கான காரணத்தை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெப்ப அலை பாதிப்பு தொடர்பாக மருத்துவமனைக்கு வந்தவர்களில் 8 பேர் வந்தவுடனேயே இறந்துவிட்டதாகவும், மற்றொரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.
"இவையெல்லாம் பிற்பகல் 1 மணி முதல் இரவு 8.30 மணிக்குள் நடந்து," முடிந்ததாக அவர் கூறினார்.
இறப்பதற்கு முன் இரண்டு நோயாளிகளின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்ததால் அவர்கள் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்சில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் செண்ட் காலனி, ரயில்வே காலனி, ஜர்தராங் மற்றும் ரூர்கேலா நகரின் அருகிலுள்ள ஜல்தா மற்றும் ஹதிபரி போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
வியாழக்கிழமை மருத்துவமனையில் 10 பேர் இறந்துள்ளதை உறுதிப்படுத்திய மருத்துவமனையின் பொறுப்பு இயக்குநர் மருத்துவர் சுதாராணி பிரதான், அவர்களின் இறப்புக்கான காரணத்தை உடனடியாக உறுதிப்படுத்த முடியாது என்றார்.
"இறந்தவர்களின் நோய் பாதிப்பு விவரங்கள் எதுவும் தெரியாத நிலையில், இறப்புக்கான காரணங்களை உறுதிப்படுத்த முடியாது," என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் இருந்ததா என்பதை வெள்ளிக்கிழமை நடைபெறும் உடல்கூராய்வுக்குப் பிறகு தெரியவரும் என்றும், இறந்தவர்களின் உடல்களில் வேறு வெளிப்புற பாதிப்பு அடையாளங்கள் எதுவும் இல்லை என்றும் மருத்துவர் பிரதான் கூறினார்.
ஒடிசாவில் இன்னும் 2 நாட்களுக்கு கடும் வெப்பம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை ஜர்சுகுடாவில் அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் கோடையின் அதிக வெப்பமான நாளாகப் பதிவு செய்யப்பட்டது.
ஜார்சுகுடாவில் 22 சதவீத ஈரப்பதத்துடன் வெப்பக் குறியீடு 52 டிகிரி செல்சியஸாகவும், மேற்கு நகரமான சம்பல்பூரில் 29 சதவீத ஈரப்பதத்துடன்
இதன் வெப்பக் குறியீடு சுமார் 55 டிகிரி செல்சியஸ் என்று புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி உமாசங்கர் தாஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.