

மும்பை: புகழ்பெற்ற சாரங்கி இசைக்கலைஞர் பண்டிட் ராம் நாராயண்(96) சனிக்கிழமை காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நாட்டின் புகழ்பெற்ற சாரங்கி இசைக்கலைஞரான நாராயண்(96) மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.
அவரது மறைவுக்கு மகாராஷ்டிரம் மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் உள்பட நாடு முழுவதும் இருந்து திரையுலக பிரபலங்கள், இசைக்கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
சாரங்கி இசைக்கலைஞர் அருணா நாராயண் மற்றும் சரோத் கலைஞரான பிரிஜ் நாராயண், ஷிவ் மூன்று மகன்கள் மற்றும் ஆறு வயதில் அவரிடம் பயிற்சி பெற்று தற்போது புகழ்பெற்ற சாரங்கி கலைஞரான 39 வயதான பேரன் ஹர்ஷ் நாராயண் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு அருகில் உள்ள அம்பர் கிராமத்தில் பாரமரிய இசை மரபுகளைக் கொண்ட குடும்பத்தில் 1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்தவர் நாராயண். அவரது தந்தையின் வழிகாட்டுதலின் படி, சாரங்கி இசைக்கருவியை இசைப்பதில் தேர்ச்சி பெற்றார். பின்னர் ராயல் ஆல்பர்ட் மற்றும் பிபிசி ப்ரோம்ஸ் போன்ற பிரபலமான அரங்குகளின் நிகழ்ச்சிகள் மூலம் சாரங்கி இசைக்கருவியை தனி இசைக்கருவியாக புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றார்.
பாலிவுட்டில் மகத்தான வெற்றியைக் கண்ட நாராயண், இறுதியில் பாரம்பரிய சாரங்கி இசையின் மீதுள்ள அதீத பற்றால் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்காகவும், இசை வட்டங்களின் முக்கியத்துவத்தில் இருந்து கிட்டத்தட்ட மங்கிப்போன சாரங்கி இசைக்கு புதிய உயிர் கொடுப்பதை முன்னோடிப் பணியாக கருதி பாலிவுட் திரையுலகின் புகழையும் பெருமையையும் விட்டுக்கொடுத்தார். அவரது ஆழ்ந்த இசை உணர்ச்சி வெளிப்பாடு மற்றும் தொழில்நுட்ப புத்திசாலினத்தனத்தால் குறிப்பிடப்பட்ட இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான இசை கச்சேரிகளில் சாரங்கியை இசைத்தது அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று தந்தது. மேலும் புதிய தலைமுறை இசைக்கலைஞர்களை ஊக்கப்படுத்தியது.
நாட்டின் பாரம்பரிய இசைக்கருவியான சாரங்கியில் அவரது சாதனைக்காக அவர் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
சாரங்கி இசைக்கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்பட்ட நாராயணின் பங்களிப்புகள் பாரம்பரிய இந்திய இசைக்கருவியை ஒரு நாட்டுபுற இசைக்கருவியில் இருந்து உலகயளவில் ஒரு பிரபலமான தனி இசைக்கருவியாக மாற்றியதற்காக பெரிதும் பாராட்டப்பட்டார். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார்.
அவரது கலைத்திறனை பாராட்டி 1976 இல் பத்மஸ்ரீ, 1991 இல் பத்ம பூஷன், 2005 இல் பத்ம விபூஷன் மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது உள்பட நாட்டின் பல மதிப்புமிக்க விருதுகளால் கௌரவிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.