டெல்டாவில் நவ. 23-27 அதி கனமழை: மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!

விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து...
டெல்டாவில் நவ. 23-27 
அதி கனமழை: மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!
Published on
Updated on
1 min read

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் 23.11.2024 முதல் 27.11.2024 வரை கனமழை முதல் அதி கனமழை குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்யக்கூடும்  என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழையால் ஏற்படும் பாதிப்பை வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கண்காணித்திட குழு அமைக்கப்பட்டு பயிர்சேத நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இப்பருவத்திற்கு, டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான உரங்களான யூரியா 53,366 மெட்ரிக் டன், டிஏபி 9,181, பொட்டாஸ் 14,196  மற்றும் காம்ப்ளக்ஸ் 24,483 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.   

வடகிழக்கு பருவமழையின் காரணமாக வயல்களில் நீர் தேங்கும்பட்சத்தில், நீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக 21 எண்கள் நீர் இறைக்கும் கருவிகள் மேலும், 805 விசையிலான மரம் அறுக்கும் கருவிகள் 60 மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் 85 மண் தள்ளும் இயந்திரங்கள் வேளாண்மை பொறியியல் துறை மூலம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், வடகிழக்கு பருவமழையின்போது கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் வெள்ள சூழ்நிலையில் நெற்பயிருக்கான மேலாண்மை நடவடிக்கைகள்

1. மழைநீர் தேங்கும்பட்சத்தில் வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரினை வடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்தல் வேண்டும்.

2. மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொள்ளி இடுதல் போன்றவற்றை தவிர்த்திட வேண்டும். 

3. போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன், ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளித்தல் வேண்டும்.

4. தூர் வெடிக்கும் பருவத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட வாய்ப்புள்ளது.  இதனை நிவர்த்தி செய்ய மழை நின்று, நீர் வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா,  18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும் வைத்து 17 கிலோ பொட்டாசியத்துடன்  கலந்து  வயலில் இடுதல் வேண்டும்.

மழைக்காலத்தில் புகையான் பூச்சி தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் செல்லும் பொழுது வேம்பு சார்ந்த பூச்சி மருந்தாகிய   அசாடிராக்டின்- 0.03% மருந்தினை வேளாண் துறையின் பரிந்துரையின்படி உபயோகப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்திட 30.11.2024 அன்று கடைசி நாள் என்பதால், விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com