எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியாக டிச. 2 ஆம் தேதி காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் நடந்த வன்முறை, மணிப்பூர் கலவரம் ஆகிய விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று(நவ. 29) 4-ஆவது நாளாக முடங்கியது.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடர் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை முதல், அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு, சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது நிகழ்ந்த வன்முறை ஆகிய விவகாரங்கள் குறித்து உடனடி விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிக்க: திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை: இபிஎஸ் விமர்சனம்
எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டுவந்த நிலையில், டிச. 2 ஆம் தேதி காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவா் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
அமளிக்கு மத்தியில் ஜகதீப் தன்கர் பேசுகையில், ”இதை ஊக்குவிக்க முடியாது. தவறான முன்னுதாரணத்தை நாம் உருவாக்குகிறோம். பொறுத்தமற்ற நிலைக்கு நாம் செல்கிறோம்” என்று பேசினார்.