ஃபென்ஜால் புயல்: 2229 நிவாரண முகாம்கள் தயார்!

ஃபென்ஜால் புயல் எதிரொளியாக, தயார் நிலையில் நிவாரண முகாம்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இது 30.11.2024 அன்று பிற்பகல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று (29.11.2024) காலை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். 

ரெட் அலர்ட்

இன்று (29.11.2024) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாருர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேலாக அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீட்டருக்கு மேலாக மிககனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவாரண முகாம்கள்

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண மைய கட்டடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

மீட்புப் படை

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி ஏற்கனவே நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று (29.11.2024) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு  தேசிய பேரிடர் மீட்புப் படையின் 1 குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா 1 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com