திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்.
திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ்.

பட்டியலின, பழங்குடி மக்களுக்கான அதிகாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

Published on

விழுப்புரம்: உள்ளாட்சியில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான அதிகாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் பாமக சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்ததாவது:

கர்நாடகத்தை பின்பற்றி தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தி சமூக நீதியை காக்கவேண்டும்.

தமிழக அரசியல் வரலாற்றில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கோ.வி. செழியன் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் பழங்குடியினரையும் அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் நிகழாண்டில் 13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் இல்லை. எனவே தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை கர்நாடக அரசிடம் கேட்டுப்பெற்று முறை வைக்காமல் காவிரியிலும்.கிளை ஆறுகளிலும் திறந்துவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கிராமப்புற உள்ளாட்சிகளை நகர்புற உள்ளாட்சிகளுடன் இணைத்தால் சொத்துவரி தண்ணீர் வரி அதிகாரிக்கும்.

100 நாள் வேலைத்திட்டம் மூலம் வாழ்வாதாரம் பெறும் கிராம மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே கிராமப்புற உள்ளாட்சிகளை நகர்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். மேலும் சிப்காட் விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

மதுவிலக்கு வேண்டி யார் குரல் கொடுத்தாலும் அது பாமகவின் குரலாகவே இருக்கும்.

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுத்தினார்.

மேலும் விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூர் ஊராட்சித் தலைவர் சங்கீதாவை இருக்கையில் அமரவிடாமலும், பணிகளை செய்யவிடாமலும் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் . இதை பாமக வன்மையாக கண்டிக்கிறது என ராமதாஸ் தெரிவித்தார்.

பேட்டியின் போது பாமக தலைமை நிலையச் செயலர் அன்பழகன், மாவட்டச் செயலர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com