ரெளடி கொலை வழக்கில் தொடர்புடைய ரெளடியை சுட்டுப்பிடித்த போலீசார்!
திண்டுக்கல்லில் ரெளடி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவா் உள்பட 6 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவலரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரௌடி ரிச்சா்ட் சச்சினை தனிப்படை போலீசார் முழங்காலில் சுட்டுப் பிடித்தனர்.
திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ச. முகமது இா்பான் (24). கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா், தனது நண்பா்கள் முகமது அப்துல்லா (24), முகமது மீரான் (22) ஆகியோருடன், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது முகமது இா்பானை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா். அவருடன் சென்ற முகமது அப்துல்லா காயமடைந்தாா்.
இதுதொடா்பாக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்த நிலையில், முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த தனசாமி மகன் ரிச்சா்ட் சச்சின் (26), அருள்ராஜ் மகன் மாா்ட்டின் நித்திஷ் (27), செல்வராஜ் மகன் எடிசன் சக்கரவா்த்தி (24), மாரம்பாடியைச் சோ்ந்த செபஸ்தியாா் மகன் பிரவீன் லாரன்ஸ் (29) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதையும் படிக்க | பெயருக்காக அரசியலுக்கு வரவில்லை! விஜய்
இதனிடையே, முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த எடிசன்ராஜ் (25), சைமன் செபஸ்தியாா் (23) ஆகிய இருவரும், திண்டுக்கல் 2-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ரௌடி ரிச்சர்ட் சச்சின் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக, தனிப்படை போலீசார் மாலைப்பட்டி சுடுகாடு பகுதிக்கு அழைத்துச் சென்றபோது, காவலர் அருணை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச்செல்வதற்கு முயன்றபோது, தற்காப்புக்காக தனிப்படை போலீசார் ரிச்சர்ட் சச்சின் முழங்கால் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
காவல் அருண், ரௌடி ரிச்சர்ட் சச்சின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

