மெரீனா உயிரிழப்புக்கு அனைவருமே பொறுப்பு: செல்வப்பெருந்தகை பேட்டி

மெரீனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக காங்கிரஸ் நிவாரணம் அறிவிப்பு.
selvaperunthagai
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப்பெருந்தகை (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மெரீனாவில் விமானப் படை சாகச நிகழ்ச்சியின்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுடன் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை,

'மத்திய அரசின் விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. லிம்கா சாதனையில் பதிவு செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்திய விமானப்படை மேற்கொண்டது. 15 லட்சம் மக்கள் கூடும் அளவிற்கு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது. இதில் ஐந்து நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பாக அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

இனிவரும் காலங்களில் இது போன்ற ஒரு பொது நிகழ்ச்சியில் மரணம் ஏற்படாமல் துயரங்கள் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் எங்களது வேண்டுகோள். இது மிகப்பெரிய படிப்பினை. ஆனால், கடந்த காலங்களில் இந்திய விமானப்படை மாலை நேரங்களில்தான் இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை நடத்தியது, அவ்வாறு இருக்க சென்னையில் 11 மணியிலிருந்து 1 மணி வரை உச்சி வெயிலில் ஏன் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது? என்பதுதான் எங்களது கேள்வி.

15 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடினாலும், நெரிசலில் யாரும் இறக்கவில்லை. 4 பேர் நீர்ச்சத்து குறைபாட்டினால் இறந்துள்ளனர். ஒருவர் எப்படி இறந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். நெரிசல் ஏற்பட்டிருந்தால் காவல்துறை மீது குறை சொல்லியிருக்கலாம்? ஆனால் நெரிசலில் அவர்கள் இறக்கவில்லை.

இதை யாரும் நியாயப்படுத்தி பேச முடியாது. கடந்துபோக முடியாது. தமிழக காங்கிரஸ் இந்த மரணங்களை அரசியலாக்க விரும்பவில்லை.

எனினும் அரசு, விசாரணை ஆணையம் அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு எந்த இடத்தில் தவறு நடந்திருக்கிறது என மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த நிகழ்விற்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், 'நான், நீங்கள், மக்கள் என அனைவரும் பொறுப்பு' என்று கூறினார் .

பின்னர், 'தமிழக காங்கிரஸ் சார்பில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும், உயிரிழந்த நபர்களின் குழந்தைகளின் படிப்புச் செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்கும்' என தெரிவித்த அவர், தமிழக அரசு உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறினார்.

மெரீனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com