இந்தியா கூட்டணிக்கு மெஹபூபா முஃப்தி ஆதரவா?

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணிக்கு மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி) ஆதரவு?
mehbooba mufti
மெஹபூபா முஃப்தி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணி கட்சிக்கு மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி) ஆதரவு தெரிவிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீரில் 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை(அக். 8) ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டுக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுள்ளன. இந்நிலையில் இந்த கூட்டணிக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி)யும் ஆதரவு தெரிவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு- காஷ்மீரில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் பிடிபி கட்சிதான், யார் ஆட்சி என்பதைத் தீர்மானிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து தேவைப்பட்டால் இந்தியா கூட்டணிக்கு பிடிபி ஆதரவளிக்கும் என்று அக்கட்சியினர் சிலரே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டியளித்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, 'ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. எங்கள் கூட்டணியில் மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி சேர விரும்புவதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.

எங்களுக்குத் தேவைப்படாவிட்டாலும், நாங்கள் பிடிபி கட்சியின் ஆதரவைப் பெறுவோம். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமானால் ஒன்றாக அதனைச் செய்ய வேண்டும். ஜம்மு- காஷ்மீரை காப்பாற்ற நாம் அனைவரும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

கூட்டணி குறித்து மெஹபூபா முஃப்தி இன்னும் என்னுடன் பேசவில்லை. ஊடகங்களில்தான் செய்திகளை பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.

தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் குறித்து ஆச்சரியமில்லை. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு உண்மை என்னவென்று தெரியும். ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சி அமையும்' என்றார்.

இந்நிலையில் மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'இதெல்லாம் தேவையற்ற யூகங்கள். நேரடியாக சொல்கிறேன். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான், மதச்சார்பற்ற கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து பிடிபியின் தலைமை அழைப்பு விடுக்கும். இதுவே எங்களின் நிலைப்பாடு' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com