பருவமழையை எதிர்கொள்ள அரசுடன் திமுகவினர் களத்தில் நிற்க வேண்டும்: திமுக தலைமை உத்தரவு

பதற்றப்படவோ - பயப்படவோ தேவையில்லை. தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியமுமில்லை.
திமுக தலைமைக் கழகம்
திமுக தலைமைக் கழகம்
Published on
Updated on
2 min read

பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட திமுக மாவட்ட , ஒன்றிய, பகுதி, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தயாராக இருக்க வேண்டும் என திமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளனர்.

மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்நிலையில் இருந்தாலும், பொதுமக்கள் தங்களது குறைந்தபட்சத் தேவைகளைத் தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஓரிரு நாட்களுக்குத் தேவையான அளவில் அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டை, காய்கறிகள், குழந்தைகளுக்கான பிஸ்கட், தின்பண்டங்கள் ஆகியவற்றைக் கையிருப்பில் வைத்திருப்பதோடு, இரண்டு மூன்று நாட்களுக்குத் தேவையான துணி, மெழுகுவத்தி, தீப்பெட்டி, கொசுவத்தி, சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட பொருட்கள் வீட்டில் உள்ளனவா என்று கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லாத பொருட்களை மட்டும் அளவாக வாங்கிக் கொள்ளவும்.

குடிநீரைத் தேவையான அளவு சேமித்து வைத்துக் கொள்வதோடு, தேவையான மருந்து மாத்திரைகளையும் கையிருப்பில் வைத்துக் கொள்ளவும்.

செல்போன்கள், லேப்டாப், பவர் பேங்க் இருப்பின் அவற்றை முழுமையான சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பதற்றப்படவோ - பயப்படவோ தேவையில்லை. தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியமுமில்லை.

பெரும்பாலான மக்கள் இத்தகைய தயார்நிலையில் இருப்பின், அரசாங்கத்தின் முழுமையான கவனத்தை இத்தகைய தயார் நிலைக்குக் கூட வாய்ப்பில்லாத ஏழை - எளிய மக்களின் மீது செலுத்தலாம்; அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்து விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியும்.

மழையை எதிர்கொள்ள அரசாங்கம் முழு அளவில் தயாராக உள்ளது. ஒருவேளை இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப்பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்வோம்.

பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் அரசுடன் திமுக தொண்டர்கள் களத்தில் துணையாக நிற்க வேண்டும்.

ஒன்றிய, பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி மாவட்டக் கழகச் செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலேயே முழுமையாக இருந்து மக்களுக்கு உதவிட வேண்டும்.

மழைக்காலத்தில் திமுகவினர், அரசு - பொதுமக்கள் - தன்னார்வலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களும் - தன்னார்வலர்களும் முன்வைக்கின்ற கோரிக்கைகள், மழை தொடர்பாக தெரிவிக்கின்ற தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அது தொடர்பான மேல் நடவடிக்கைக்கு கட்சி நிர்வாகிகள் வழிவகை செய்யலாம். குறிப்பாக, களத்தில் தன்னார்வலர்களுடன் கை கோத்து, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெற்றுத் தருவதற்கான தலையாயப் பணிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.

குடிநீர், பால் ஆகிய இரண்டும் மிக அவசியமான தேவையாக இருக்கும். எனவே தங்கள் பகுதிகளில் அவை தடையின்றிக் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும். மீட்புப்பணிகளை மேற்கொள்ள வரும் மாநகராட்சி, மின்வாரிய ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதை உறுதிசெய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com