விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய தலைவர் விஜய், தொண்டர்களுக்கு ஒரு குட்டிக்கதையை சொல்லி கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் செயல்திட்டங்களை எடுத்துரைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
மாநாட்டின் முகப்பில் சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டை மதில் சுவா் வடிவத்தில் டிஜிட்டல் பதாகைகள் அமைத்து, அதன் மேற்பகுதியில் மிகப்பெரிய அளவிலான விஜயின் உருவப்படம். இதுதவிர, பெரியாா், காமராஜா், அம்பேத்கா் உள்ளிட்ட தலைவா்கள், சேர, சோழ, பாண்டியா்களின் டிஜிட்டல் பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மாநாடு தொடங்கியது. மாநாட்டு மேடையிலிருந்து 600 மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள ‘ரேம்ப் வாக்’ பகுதியில் நடந்து வந்து தொண்டா்களை நோக்கி கையசைத்தப்படி உற்சாகமாக மாநாடு பந்தலுக்கு வந்தார். அந்த சமயத்தில் விஜயை நோக்கி கட்சித் தொண்டர்கள் கட்சி துண்டை வீசினர். அதை கையிலெடுத்த தன் தோளில் அணிந்துகொண்டு உற்சாகமாக கையசைத்தப்படி மாநாட்டு முகப்பை நோக்கி நடந்து வந்த விஜய் தொண்டர்களின் உற்சாகத்தைக் கண்டு கண்கலங்கினார்.
முதலில் தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 101 அடி உயர கொடிக் கம்பத்தில் ரிமோட் மூலம் கட்சிக் கொடியேற்றி வைத்தார்.
இதையும் படிக்க | நீங்கள் என்ன பாயச ஆட்சியா? - தவெக தலைவர் விஜய்
தனது 45 நிமிட பேச்சில் ஒரு குட்டிக்கதை சொல்லி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அதாவது, ஒரு நாட்டுல பெரிய போர் வந்ததாம்.. அதிகாரமிக்க (பவர் ஃபுல்லான) தலைமை இல்லாததால் சிறு குழந்தையின் கையில் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்ததாம். அதனால் அந்த நாட்டுல இருந்த பெரும் தலைவர்கள் பயத்தில் இருந்தார்களாம். அந்த சிறு குழந்தை நாட்டின் படையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு ‘போர்க்களம் போகலாம்’ என சொன்னதாம்.
அப்போது அந்த பெருந்தலைவர்கள், நீ சிறு குழந்தை என்றெல்லாம் சொன்னார்களாம். எந்த பதிலும் சொல்லாமல் போருக்கு தனியாக தன் படையுடன் சென்ற அந்த சிறு குழந்தை என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் சொல்லியுள்ளார்கள்.. ஆனால் கெட்ட பய சார் அந்த சிறு குழந்தை...” என்றார்.
நம்மை நம்பி, செயல்பாட்டை நம்பி நம்மோடு சிலபேர் வரலாம் இல்லையா? அதுக்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா? அவங்களையும் அன்போட அரவணைக்கனும் இல்லையா? நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துதான் பழக்கம்.
நம்மை நம்பி நம்மோடு களமாட வருகிறவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப்பகிர்வு அளிக்கப்படும்.. என்றார் விஜய்.