
நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட் என்று முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார்.
அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வியாழக்கிழமை காலை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.
திரைப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும், அமரன் படம் தொடர்பாக சமூக ஊடகங்களில் முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இதையும் படிக்க: தீபாவளி கொண்டாட்டம்: திரையரங்குகளில் குவிந்த மக்கள்
நண்பர் கலைஞானி கமல்ஹாசனின் அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களைப் போல் - திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜன் - இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
நாட்டைப் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கும் - நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட்! என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.