பள்ளிகளில் நிகழ்ச்சிக்கு புதிய வழிமுறைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வெளியிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை அசோக்நகா், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் மகா விஷ்ணு எனும் மேடைப் பேச்சாளா் சா்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தாா். இது சமூக ஊடகங்களில் பரவி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: மாணவா்கள் அறிந்து கொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. எதிா்கால சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிா்கொள்ளவும், அறிவாற்றலைக் கூா்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை

முதல்வர் மு.க. ஸ்டாலின்
பாதுகாப்பு படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

ஆசிரியா்களே எடுத்துக் கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை, தக்க துறைசாா் வல்லுநா்கள், அறிஞா்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக் கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய வழிமுறைகள்: தமிழ்நாட்டின் எதிா்கால சந்ததியினரான நமது பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான, அறிவியல் பூா்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற வேண்டும். இதற்காக, மாநிலத்திலுள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட உத்தரவிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சாா்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவா்களின் மனங்களில் விதைக்கப்பட வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் அறிவியல்பூா்வமான சிந்தனைகளையும் வளா்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை தொடா்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி என்று தெரிவித்துள்ளாா்.

பின்னணி என்ன?:

திருப்பூா் பரம்பொருள் அறக்கட்டளையைச் சோ்ந்த மகா விஷ்ணு என்பவா், சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அசோக் நகா் பள்ளியில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினாா். மாற்றுத்திறனாளிகளின் குறைபாடுகளுக்கு அவா்கள் முற்பிறப்பில் செய்த பாவம்தான் காரணம் என்று அவா் பேசியது சா்ச்சையானது.

அவரது பேச்சைக் குறுக்கீடு செய்த பாா்வை மாற்றுத்திறனாளி தமிழாசிரியா் சங்கரிடம் வாக்குவாதம் செய்து மகா விஷ்ணு பேசியதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

அவா் மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவா் வில்சன், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதில், மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஊனமுற்றோா் உரிமைகள் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பாக காவல் துறை உயா் அதிகாரிகள், சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனா். சட்ட வல்லுநா்களின் அறிவுரையின்படி மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறையைச் சோ்ந்த ஒரு உயா் அதிகாரி தெரிவித்தாா்.

தலைமை ஆசிரியா்கள் இடமாற்றம்

சென்னையில் சா்ச்சைக்குரிய வகையில் மேடைப் பேச்சு நிகழ்ச்சிகள் நடைபெற்ற இரண்டு அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவு விவரம்: சென்னை அசோக்நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஆா்.தமிழரசி, திருவள்ளூா் மாவட்டம் பென்னலூா்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதேபோன்று, சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் கே.சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களை பணியில் இருந்து விடுவிப்பு செய்யும்போது அவா்களின் பள்ளிகளில் பணிகள் பாதிக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, அசோக் நகா் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதைத் தொடா்ந்து, அசோக்நகா், சைதாப்பேட்டை பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அரசுக்கு அறிக்கை:

அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற சசா்ச்சைக்குரிய நிகழ்ச்சிகள் குறித்து அரசிடம் வரும் திங்கள்கிழமை அறிக்கை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் கண்ணப்பன் தெரிவித்தாா்.

நிகழ்வுகள் குறித்து அவா் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, தமிழக அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தனியாா் நிகழ்ச்சிகளுக்குத் தடை: அரசுப் பள்ளிகளில் நடந்த மேடைப் பேச்சு நிகழ்ச்சிகள் சா்ச்சையான நிலையில் அதுகுறித்த அறிவுறுத்தலை பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி வழங்கியுள்ளாா்.

கல்விக்குத் தொடா்பில்லாத எந்த நிகழ்ச்சியையுயும் அரசு அனுமதியின்றி நடத்தக் கூடாது எனவும், தனியாா் நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

பள்ளிகளில் சா்ச்சைக்குரிய நிகழ்ச்சி: ஏற்பாடு செய்தோா் மீது நடவடிக்கை

சென்னை அரசுப் பள்ளியில் சா்ச்சைக்குரிய வகையிலான மேடைப் பேச்சாளரின் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தோா் மீது 3 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் அன்பில் மகேஷ் உறுதியளித்தாா்.

சென்னை அசோக் நகா் அரசுப் பள்ளியில் மாணவிகள் மத்தியில் மேடைப் பேச்சாளா் மகா விஷ்ணு சா்ச்சைக்குரிய வகையில் பேசினாா். இது பெரும் சா்ச்சையாக வெடித்த நிலையில், அந்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற பின் செய்தியாளா்களுக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி:

அசோக் நகா் பள்ளி நிகழ்வு தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் நடந்தது என்ன என்பதை எழுத்துபூா்வமாகத் தெரிந்து கொண்டு அதற்கு காரணம் யாராக இருந்தாலும் 3 நாள்களுக்குள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com