
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை அக்ஷிதா போட்டியாளராக பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு வயதுகளில், துறைகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்துகொள்வார்கள். அந்தவகையில் நடிகை அக்ஷிதா இளம் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் - 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு முன்பை விட சற்று அதிகரித்துள்ளது.
போட்டியாளர்கள் மீதான எதிர்பார்ப்பு
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் 100 நாள்களுக்கு உள்ளே தங்கியிருந்து, அவர்களின் தனிப்பட்ட குணங்களை பரிசோதிப்பதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பாடல், நடனம், நடிப்பு, சமூக சேவை என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் சில போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாரதி கண்ணம்மா தொடரில் அறியப்பட்ட நடிகர் அருண், யூடியூபர் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரின் காதலி ஜோயா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.
இவர்களுடன் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர்களும் போட்டியாளர்களாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
சின்னத்திரை போட்டியாளர்
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், அமிர்தா என்ற பாத்திரத்தில் நடித்து வரும் அக்ஷிதா போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சின்னத்திரையிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அக்ஷிதா பெயர் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
பாக்கியலட்சுமி தொடரில் நடித்த நடிகை ரேஷ்மா பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஈரமான ரோஜாவே தொடரில் நடித்த நடிகை கேப்ரியல்லா பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த சீசனில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த சரவணன் பங்கேற்றார்.
இவர்களின் வரிசையில் தற்போது அக்ஷிதா பிக்பாஸ் -8 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.