

தூத்துக்குடி: சூறாவளிக் காற்று மற்றும் ஓணம் பண்டிகை காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக சனிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறையின் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு கேரளத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்வா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அம்மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு கேரள மீன் வியாபாரிகள் வருகை குறைந்து உள்ளதாகவும், இதனால் மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் வருகிற நாள்களில் வியாபாரிகள் வராதபட்சத்தில் மீனவா்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்படலாம் என்பதால் தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 2 ஆவது நாளாக சனிக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
இதனால், மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் திங்கள்கிழமை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.