கேஜரிவாலை மீண்டும் முதல்வராக்குவதே இலக்கு: அதிஷி

இந்த பொறுப்பை சுமக்கும் வரை, எனக்கு ஒன்றுமட்டும்தான் இலக்கு.
Atishi
அதிஷிஏஎன்ஐ
Published on
Updated on
1 min read

அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் முதல்வராக்குவதே எங்கள் இலக்கு என்று தில்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி தெரிவித்துள்ளார்.

தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஜாமீனில் வந்த நிலையில், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்க இன்று(செவ்வாய்க்கிழமை) காலை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தில்லியின் அடுத்த முதல்வராக ஒருமனதாக அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.

அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், முதல்வராகவும், தில்லி ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்ட அதிஷி முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

என்னை முதல்வராக தேர்ந்தெடுத்த எனது குரு அரவிந்த் கேஜரிவாலுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை அவர் கொடுத்துள்ளார். நான் சாதரணக் குடும்பத்தில் இருந்து வந்தவள்.

ஒருவேளை, நான் வேறு கட்சியில் இருந்து இருந்தால் எனக்கு தேர்தலில் நிற்பதற்தான வாய்ப்புக்கூட கிடைத்திருக்காது. ஆனால், அரவிந்த் கேஜரிவால் என்னை நம்பி எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியைத் தொடர்ந்து தற்போது முதல்வர் பொறுப்பை வழங்கியுள்ளார். அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கை மகிழ்ச்சியளிக்கிறது. கேஜரிவால் இன்று ராஜிநாமா செய்யவுள்ளது எனக்கு வருத்தமாகவுள்ளது.

ஒரே ஒரு இலக்குடன் தேர்தல் வரை நான் முதல்வராக தொடர்வேன், அரவிந்த் கேஜரிவாலை மீண்டும் தில்லி முதல்வராக்குவதே எங்கள் குறிக்கோள். இந்த பொறுப்பை சுமக்கும் வரை, எனக்கு ஒன்றுமட்டும்தான் இலக்கு. கேஜரிவாலின் வழிகாட்டுதலின் பேரில் தில்லி மக்களைப் பாதுகாத்து ஆட்சி நடத்துவேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.