திருமங்கலத்தில் தனியார் வங்கியில் பெற்றக் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திருமங்கலத்தை அடுத்த ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி(41). இவரது மனைவி சிவஜோதி(32). இவர்களுக்கு ஜனார்த்தனன்(14), தர்ஷனா(12), தர்ஷிகா(12) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
பால்பாண்டி சொந்தமாக வியாபாரம் செய்வதற்காக தனது மனைவி சிவஜோதி பெயரில் இரண்டு தனியார் வங்கிகளில் முறையே ரூ.8 லட்சம் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கடன் பெற்று, மனைவி சிவஜோதி பெயரில் ஊராண்ட உரப்பனூரில் ஊறுகாய் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர் ஒருவர் கடனை திருப்பி செலுத்தாததற்கு கடந்த பத்தாம் தேதி வீட்டிற்கு வந்து தொல்லை செய்துள்ளார். மேலும், 16 ஆம் தேதிக்குள் கடனை செலுத்தவும் அவர் கெடு வைத்து சென்றாராம். இது தொடர்பாக கைபேசியிலும் அடிக்கடி தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார்.
இதனால் விரக்தியடைந்த பால்பாண்டி தற்கொலை செய்ய முடிவெடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் குருணை மருந்து வாங்கி வந்துள்ளார். அதனை குடும்பத்தினர் அனைவரும் தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு தூங்கிவிட்டனர் .
இதனைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பால்பாண்டி குடும்பத்தினர் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் வந்து இறங்கியுள்ளனர். குழந்தை காலையிலிருந்து வாந்தி எடுப்பதாக அவர்கள் மருத்துவரிடம் கூறியுள்ளனர். மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அனைவரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பால்பாண்டியிடம் மருத்துவர்கள் கேட்டபோது அனைவரும் குருணை மருந்து சாப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் ஐந்து பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.